மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பிக்கும் போது எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்து இருந்தன. ஆனால் 10.20 மணியளவில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிய துவங்கின.
இன்று நண்பகலில் ஜூன் 7ஆம் தேதியுடன் முடிவடையும் வாரத்தின் பணவீக்க விகிதத்தை மத்திய அரசு வெளியிடும். பணவீக்கம் 9 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. அத்துடன் மத்திய அரசுக்கும் இடது சாரி கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேற்றுமை போன்ற காரணங்களால் பங்குச் சந்தைக்கு பாதிப்பு இருக்கும் என்று தெரிகிறது.
நேற்று அமெரிக்க பங்குச் சந்தைகளில் சாதகமான நிலை இருந்தாலும், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் பாதகமான நிலை இருந்தது. ஆசிய பங்குச் சந்தைகளில் இன்று இரண்டுவிதமான போக்கும் காணப்பட்டது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 5 டாலர் குறைந்தது. சீனா பெட்ரோலிய பொருட்களின் விலையை அதிகரித்து இருப்பதால், அதன் இறக்குமதி குறையும் என்பதால் கச்சா எண்ணெய் விலை குறைந்தது.
காலை 10.05 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 70 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 15,157.12 ஆக இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 12 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4516.60 ஆக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 624 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1439 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 59 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 25.74 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 15,062.25 ஆக இருந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 17.40 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4486.85 ஆக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 22.79, சுமால் கேப் 15.88, பி.எஸ்.இ. 500- 18.56 புள்ளி குறைந்தது.
நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,656.10 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,254.46 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.598.36 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.680.39 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.539.32 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.141.07 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
இந்த மாதத்தில் நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 9,149.67 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.55,644.53 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் நேற்று குறியீட்டு எண்கள் குறைந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-48.50 புள்ளி குறைந்தது.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 34.03, எஸ் அண்ட் பி 500-5.02, நாஸ்டாக் 32.35 புள்ளி அதிகரித்தது.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் ஜப்பான், தென்கொரிய பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைத்து இருந்தன. மற்றவைகளில் அதிகரித்து இருந்தது.
தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 15.84, ஜப்பானின் நிக்கி 172.25 புள்ளி சரிந்தது.
சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 20.89, சீனாவின் சாங்காய் காம்போசிட் 130.66, ஹாங்காங்கின் ஹாங்செங் 292.59 புள்ளி அதிகரித்தது.