மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது பங்கு விலைகள் அதிகரித்து இருந்தது. சிறிது நேரத்திலேயே நிலைமை மாறி குறியீட்டு எண்கள் குறைய துவங்கின. இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. ஆனால் சென்செக்ஸ், நிஃப்டி தவிர மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்து உள்ளன.
காலை 10.05 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 55 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 15,825.74 ஆக இருந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 26 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4,703.30 ஆக இருந்தது.
அமெரிக்கா, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் நேற்று சாதகமான போக்கு நிலவியது. இதே போல் இன்று காலை ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்துள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் நேற்று மதியத்திற்கு பிறகு குறியீட்டு எண்கள் அதிகரித்தன. இன்று காலையில் விலை அதிகரித்த பங்குகளை விற்பனை செய்து இலாப கணக்கு பார்க்கும் போக்கு இருக்கும். இதனால் நண்பகல் வரை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் மாறுபடும்.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினாலும், பல மாநில அரசுகள் இதன் சுமை அதிக அளவு பாதிக்காத வகையில் விற்பனை வரியை குறைத்துள்ளன. இதனால் விலை உயர்வால் ஏற்படும் போக்குவரத்து செலவு பாதிப்பு குறையும். இதனால் டீசலின் விலை உயர்வு பங்குச் சந்தையை அதிக அளவு பாதிக்காது என கருதப்படுகிறது.
மத்திய அரசு இன்று மதியம் பணவீக்கம் பற்றிய புள்ளி விபரத்தை வெளியிடும். பணவீக்கம் சென்ற வாரத்தைவிட அதிகளவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் இன்று வாரத்தின் கடைசி நாளாக இருப்பதால், மதியத்திற்கு மேல் பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் உயர்வதற்கோ அல்லது குறைவதற்கோ வாய்ப்பு உள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் 10.39 மணி நிலவரப்படி 1146 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 742 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 59 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
இன்று காலையில் ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சீனா, தென்கொரியா தவிர மற்ற நாட்டு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன.
காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 30 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 15,739.72 ஆக குறைந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 5.40 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4671.55 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 33.47, சுமால் கேப் 40.74, பி.எஸ்.இ. 500- 9.17 புள்ளி அதிகரித்தது.
நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,803.35 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.5,221.69 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.1,418.34 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,506.98 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.936.95 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.570.95 மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.50,482.54 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 213.97, எஸ் அண்ட் பி 500- 26.85, நாஸ்டாக் 46.80 புள்ளி அதிகரித்தது.
இன்று ஹாங்காங்கின் ஹாங்செங் 241.11, ஜப்பான் பங்குச் சந்தையின் நிக்கி 191.97, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 19.79 புள்ளி அதிகரித்தது.
அதே நேரத்தில் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 1.50, சீனாவின் சாங்காய் காம்போசிட் 5.74 புள்ளி குறைந்தது.