மும்பை : மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்தே தொடர்ந்து சரிவு நிலவுகிறது.
மும்பை பங்கு சந்தைக் குறியீட்டு எண் 280 புள்ளிகள் குறைந்து 16,370.09 புள்ளிகளாக வர்த்தகத்தைத் துவக்கியது. தேசிய பங்குச் சந்தைக் குறியீடும் 50 புள்ளிகள் குறைந்தே துவங்கியது.
ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் காரணமாக முதலீட்டாளர்கள் அதிக அளவிற்கு பங்குளை விற்க முன்வந்ததால் இந்நிலை ஏற்பட்டது.
கச்சா எண்ணை விலையேற்றம் காரணமாக கடந்த வெள்ளிக் கிழமை அமெரிக்க பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. பணவீக்கமும், அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையும் இந்தச் சரிவிற்கு காரணம் என்று கூறப்பட்டது. இதுவே இன்று ஆசிய பங்குச் சந்தைகளில் எதிரொலித்ததுள்ளது.
நண்பகல் 12 மணி நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தைக் குறியீடு 181 புள்ளிகள் குறைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தைக் குறியீடு 43 புள்ளிகள் குறைந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தைப் பட்டியலிலுள்ள பார்த்தி ஏர்டெல், சிப்லா, டி.சி.எஸ்., ஹிந்துஸ்தான் யூனிலீவர், கிராசிம் ஆகியவற்றின் பங்குகள் தவிர மற்ற பங்குகளின் விலைகள் அனைத்தும் சரிந்துள்ளன.