பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன.
இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது, சென்செக்ஸ் 571 புள்ளிளும், நிஃப்டி 171.20 புள்ளிகளும் சரிந்தன.
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வெள்ளிக் கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் குறுகிய கால மூலதன இலாபத்தின் மீதான வரியை 10 விழுக்காட்டில் இருந்து 15 விழுக்காடாக அதிகரித்தார்.
இதன் விளைவாக வெள்ளிக் கிழமை சென்செக்ஸ் 246 புள்ளிகள் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
காலை 11.00 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 496.76 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,108.96 ஆக குறைந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 149.55 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 5073.95 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 159.83, சுமால் கேப் 191.85, பி.எஸ்.இ 500-179.61 புள்ளிகள் சரிந்தன.
தேசிய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் 2 முதல் 4 விழுக்காடு வரை சரிந்தன.
அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை டோவ் ஜோன்ஸ் 315.79, நாஸ்டாக் 60.09, 24.13, எஸ் அண்ட் பி 500-37.05 புள்ளிகள் குறைந்து இருந்தது.
இதே போல் ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் ஹாங்காங்கின் ஹாங்செங் 717, ஜப்பானின் நிக்கி 472.13, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 89.10, தென்கொரியாவின் சியோல் காம்போசிட்40.63 புள்ளிகள் குறைந்து இருந்தன. ஆனால் சீனாவின் சாங்காய் காம்போசிட் 194.08 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.
ஆசிய நாட்டு சந்தைகளிலும், அமெரிக்க பங்குச் சந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. தொழில் துறை எதிர்பார்த்த அளவு பட்ஜெட்டில் சலுகைகள் இல்லை. அத்துடன் உள்நாட்டு உற்பத்தி குறைவு மற்றும் பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவைகள் பங்குச் சந்தையின் பாதிப்பு காரணம் என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
இன்று பங்குச் சந்தையின் போக்கு மாறுவதற்கு வாய்ப்பு குறைவாக இருக்கின்றது என கருதுகின்றனர்.