மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறைந்த குறியீட்டு எண்கள், கடைசி வரை அதிகரிக்கவில்லை.
இன்று மத்திய அரசின் 2008-09 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், பங்குச் சந்தையில் பாதகமான நிலையையே ஏற்படுத்தியது. குறுகிய கால இலாபம் மீதான வரியை 10 விழுக்காட்டில் இருந்து 15 விழுக்காடாக அதிகரித்து சிதம்பரம் அறிவித்தார். இது பெரிய அளவில் பங்குச் சந்தையை பாதித்தது என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் அந்நிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் பங்கு விலைகள் குறைந்ததால், இந்திய பங்குச் சந்தையில் இறுதி வரை பங்குகளின் விலைகள் அதிகரிக்கும் வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது. இரண்டு பங்குச் சந்தைகளிலும் பெரும்பாலான பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.
இன்று நடந்த வர்த்தகத்தில் சென்செக்ஸ் ஒரு நிலையில் 500 புள்ளிகள் வரை சரிந்தது.
மாலை வர்த்தகம் முடிவடையும் போது, சென்செக்ஸ் நேற்றைய நிலவரத்தைவிட 245.76 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,578.72 ஆக குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 61.60 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 5,223.50 ஆக குறைந்தது.
இன்று இயந்திர உற்பத்தி, தகவல் தொழில் நுட்ப பங்கு விலைகள் அதிகளவு குறைந்தன. வாகன உற்பத்தி நிறுவனங்களின் பங்குவிலை அதிகரித்தது.
இன்று மும்பை பங்குச் சந்தையில் ரூ6,700 கோடி மதிப்புள்ள பங்குகள் விற்பனையாயின. நேற்று ரூ.5,028.03 கோடி மதிப்புள்ள பங்குகள் விற்பனை ஆகி இருந்தது.
1,627 பங்குகளின் விலை குறைந்தது. 1,071 பங்குகளின் விலை அதிகரித்தது. 43 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
ஏற்றுமதி நிறுவனங்களுக்கு எவ்வித சலுகையும் அறிவிக்காத காரணத்தினால்,,ஏற்றுமதி தொடர்புடைய நிறுவனங்களின் பங்குவிலைகள் அதிகம் குறைந்தன. குறிப்பாக தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பங்குகள் பாதிக்கப்பட்டன.
வாகன உற்பத்தி வரி குறைக்கப்பட்டதால், இத்துறையில் உள்ள நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.
சுமால் கேப் 40.00, மிட் கேப் 31.37,பி.எஸ்.இ 500-69.30 புள்ளிகள் குறைந்தன.
தேசிய பங்குச் சந்தையில் நிப்டி ஜீனியர் 21.95, சி.என்.எக்ஸ் ஐ.டி 77.85, சி.என்.எக்ஸ் 100-52.60,சி.என்.எக்ஸ் டிப்டி 65.45, சி.என்.எக்ஸ் 500-43,65, சி.என்.எக்ஸ் மிட் கேப் 50 -8.65 புள்ளிகள் குறைந்தன.
பாங்க் நிஃப்டி 80.10 சி.என்.எக்ஸ் மிட் கேப் -25.95 புள்ளிகள் அதிகரித்தன.
இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் 9 பங்குகளின் விலை அதிகரித்தது. 21 பங்குகளின் விலை குறைந்தது.