பங்குகள் விலை உயர்வு!

புதன், 27 பிப்ரவரி 2008 (12:19 IST)
பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, பங்குகளின் விலை அதிகரித்தன.

நேற்று நாள் முழுவதும் பங்குச் சந்தை எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருந்தது. ரயில்வே பட்ஜெட் தொழில் வர்த்தக நிறுவனங்கள் எதிர்பார்த்த அளவு சலுகைகள் இல்லாமல் இருந்தாலும், சரக்கு போக்குவரத்து கட்டண உயர்வு இல்லாதே தொழில் துறைக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தது. இதனால் பங்குச் சந்தையில் எவ்வித எதிர்மறையான பாதிப்பும் இல்லை.

இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது, சென்செக்ஸ் 277 புள்ளிளும், நிஃப்டி 82 புள்ளிகளும் அதிகரித்து இருந்தது. முதல் கால் மணி நேரத்தில் நடந்த வர்த்தகத்தில் இயந்திரங்கள், மின் உற்பத்தி நிறுவனங்களின் பங்கு விலை அதிக அளவு அதிகரித்தது. இதனால் குறியீட்டு எண்களும் உயர்ந்தன.

அமெரிக்கா மற்ற ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் பங்குவிலைகள் அதிகரித்து, குறியீட்டு எண்கள் அதிகரித்தன. இதனால் நிறுவன முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவிய அச்சம், மாறியது.

காலை 11.45 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 298.93 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 18,105.12 ஆக அதிகரித்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 87.45 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5357.50 ஆக அதிகரித்தது.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் மற்ற பிரிவில் உள்ள பங்கு விலைகளும் அதிகரித்தன. மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 131.05,சுமால் கேப் 142.31,பி.எஸ்.இ 500- 131.86 புள்ளிகள் அதிகரித்து இருந்தன.

தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில் நுட்ப பிரிவு தவிர, மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் 1 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்தன.

ஹாங்காங் பங்குச் சந்தையின் ஹாங்செங் 882.39, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 37.83, ஜப்பானின் நிக்கி 206.58,தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 11.76, சீனாவின் சாங்காய் காம்போசிட் 252.40, அமெரிக்க பங்குச் சந்தையில் டோவ் ஜோன்ஸ் 114.70, நாஸ்டாக் 17.51, எஸ் அண்ட் பி 500-9.49 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.

இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய போது, வர்த்தகம் தொடங்கும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் எவ்வித பாதிப்பு இருக்காது என்றே தெரிகிறது.

இன்று பங்குச் சந்தையில் அதிக அளவு மாற்றம் இருக்காது பங்குகள் விலை குறைய வாய்ப்பில்லை என்றே வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்