மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் நிலையற்ற தன்மையால் பங்குகளின் விலையில் அதிக அளவு மாற்றம் இருக்கின்றது. ரியல் எஸ்டேட், மின் உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் அதிக அளவு பாதிக்கப்பட்டது.
காலையில் பங்குச் சந்தையில் வர்த்த்கம் தொடங்கிய போது, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 17,800 புள்ளிகளில் துவங்கியது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 151 புள்ளிகள் அதிகம். இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டியும் 60.30 புள்ளி உயர்வுடன் குறியீட்டு எண் 5,197.75 இல் துவங்கியது.
இந்த நிலை மேலும் முன்னேறாமல், பங்குகளின் விலைகள் படிப்படியாக குறைய ஆரம்பித்தது.
காலை 11 மணிமுதல் 11.30 வரை பங்குகளின் விலைகள் நேற்றைய இறுதி நிலவரத்தை விட அதிக அளவு குறைந்தது.
காலை 12 மணியளவில் சென்செக்ஸ் 43.62 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,605.09 ஆக இருந்தது. மிட் கேப் 111.24, சுமால் கேப் 150.18, பி.எஸ்.இ-500- 52.35 புள்ளிகள் குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 8.90 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5,128.35 ஆக இருந்தது. மற்ற பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்து இருந்தன.
இந்திய பங்குச் சந்தைக்கு மாறாக அமெரிக்க பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன. டோவ் ஜோன்ஸ் 207.53, நாஸ்டாக் 40.86, எஸ் அண்ட் பி500- 22.74 புள்ளிகள் அதிகரித்து இருந்தன.
ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சீனாவில் சாங்காய் காம்போசிட் 3.17, ஹாங்காங்கின் ஹாங்சங் 260.63, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 6.64, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 4.47 புள்ளிகள் அதிகரித்து இருந்தது. ஆனால் ஜப்பானின் நிக்கி 84.67 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது.
இன்று முழுவதும் எல்லா பிரிவு பங்குகளி்ன் விலைகளும் அதிக மாற்றத்துடன் இருக்கும். நேற்றைய இறுதி நிலவரத்தைவிட, குறியீட்டு எண்கள் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற நிலையே உள்ளது.