பங்குச் சந்தை‌க‌ளி‌ல் சரிவு!

புதன், 30 ஜனவரி 2008 (13:11 IST)
மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் இருந்தே பங்கு விலைகள் குறைந்தன.

ரிசர்வ் வங்கி நேற்று வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லா மட்டங்களிலும் நிலவியது. இதற்கு மாறாக ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கவில்லை. அத்துடன் ரொக்க கையிருப்பு, முன்னுரி்மை கடனுக்கான வட்டி எதையுமே மாற்றவில்லை. இதன் பிரதிபலிப்பு நேற்று மதியமே பங்குச் சந்தைகளில் தெரிந்தது. மதியத்திற்கு மேல் பங்கு விலைகள் குறைந்தன.

இதே நிலையே இன்றும் தொடர்ந்தது. அத்துடன் ஆசிய பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்ததால், இந்திய பங்குச் சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் சர்வதேச அளவில் தங்கம் போன்ற அரிய உலோகங்களின் விலை அதிகரித்து வருகிறது. பங்குச் சந்தையின் செய்திருந்த முதலீடு, மற்ற பண்டக சந்தையில் திருப்பி விடப்படும் போக்கு தெரிகிறது.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ரிசர்வ் வங்கி அந்நிய முதலீட்டை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நேற்று அறிவித்ததும், இன்றைய பாதிப்பிற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்தியா உட்பட ஆசிய நாட்டு பங்குச் சந்தையில் சரிவு காணப்பட்ட அதே நேரத்தில் அமெரிக்க பங்குச் சந்தையில் குறியீட்டு எண்கள் அதிகரித்தது கவனத்திற்கு உரியது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது சென்செக்ஸ் 30 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 18,120.22 புள்ளிகளாக இருந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையி்ன் நிஃப்டியில் அதிக மாற்றமில்லை.

பிறகு இரண்டு பங்குச் சந்தைகளிலும் பங்கு விலைகள் குறைய ஆரம்பித்தது. காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 83.70 புள்ளிகளிகள் குறைந்து குறியீட்டு எண் 18,008.24 ஆக குறைந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 33 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5,247.80 ஆக குறைந்தது. இரண்டு பங்குச் சந்தைகளிலும் பங்குகளை விற்பது, வாங்குவது என்ற போக்கு தொடர்ந்து நிகழ்ந்தது.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மூன்று நாட்களில் பங்குச் சந்தைகளில் இருந்து ரூ.2,131 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

நேற்று மட்டும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.546.09 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.98.82 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

சென்செக்ஸ் பிரிவில் உள்ள 30 பங்குகளில் 21 பங்குகளின் விலை குறைந்தது. குறிப்பாக ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ஒ.என்.ஜி.சி, ரிலையன்ஸ் எனர்ஜி, பஜாஜ் ஆட்டோ, மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ஹிந்து‌ஸ்தான் யூனிலிவர், ஐ.டி.சி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எல்.அண்ட்.டி ஆகியவற்றின் பங்கு விலைகள் குறைந்தன.

அதே நேரத்தில் டி.எல்.எப், எஸ்.பி.ஐ, டாடா ஸ்டீல் ஆகியவற்றின் பங்கு விலை அதிகரித்தது.

காலை 12 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 177.40 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 17,914.50 ஆக இருந்தது.

மிட் கேப் 62.87, சுமால் கேப் 65.67, பி.எஸ்.இ-500 71.89 புள்ளிகள் குறைந்து இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 60.30 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5220.50 ஆக இருந்தது. மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் 0.14 விழுக்காடில் இருந்து 1.86 விழுக்காடு வரை குறைந்து இருந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையின் டோவ் ஜோன்ஸ் 96.41 புள்ளிகள், நாஸ்டாக் 8.15, எஸ் அண்ட் பி 8.33 புள்ளிகள் அதிகரித்து இருந்தது. இதே போல் ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் குறயீட்டு எண்கள் அதிகரித்தன.

ஆசிய நாட்டு பங்குச் சந்தையில் சீனாவில் சாங்காய் காம்போசிட் 194.96, ஹாங்காங்கின் ஹாங்செங் 373.08, ஜப்பானின் நிக்கி 133.83, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 46.75, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 48.85 புள்ளிகள் குறைந்து இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்