மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தை இன்று வரலாறு காணாத சரிவை சந்தித்தது. மும்பையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 17 ஆயிரத்திற்கும் குறைவாகவும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 6 ஆயிரத்திற்கும் குறைந்தன.
கடந்த ஐந்து நாட்களாக குறைந்து வந்த பங்கின் விலை, இன்று காலையில் இருந்தே சரிவை எதிர் கொண்டது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறிப்பிட்டு சொல்லும் படியான முன்னேற்றம் இல்லாமல் தொடர்ந்து சரிவை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் முடிந்த 4 மணியளவில் சென்செக்ஸ் 1,408.35 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 17,605.35 புள்ளிகளாக குறைந்தது. இதேபோல் மிட் கேப் 1,011.72 புள்ளிகளும், சுமால் கேப் 1,248.79, பி.எஸ்.இ-500 777.57 புள்ளிகள் குறைந்தன.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 496 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5,208.80 புள்ளிகளாக சரிந்தன. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜுனியர் 12.31 விழுக்காடு சரிந்தது. இதேபோல் மற்ற பிரிவு குறியீட்டு எண்களும் 6.75 விழுக்காடு முதல் 11.88 விழுக்காடு வரை குறைந்தன.
இந்தியாவில் மட்டுமல்லாமல், எல்லா நாடுகளிலும் கடந்த ஆறு நாட்களாக பங்கு சந்தைகளில் சரிவு ஏற்பட்டன. அத்துடன் சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை, உணவு பொருட்களின் விலை அதிகரிப்பதை ரிசர்வ் வங்கி கவலையுடன் கவனித்து வருகிறது என்று கூறியதும் பங்குச் சந்தையை மேலும் பாதித்தது. அமெரிக்காவில் பணவீக்க விகிதம் அதிகரிப்பதால், அந்நிய நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. இதுவும் பங்குகள் விலை குறைந்ததற்கு காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.