பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி!

புதன், 16 ஜனவரி 2008 (13:12 IST)
பங்குச் சந்தை நேற்றும், இன்றும் கடும் சரிவை சந்தித்தது. மும்பை குறியீட்டு எண் 20 ஆயிரத்திற்கும் குறைவாக சரிந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் துவங்கும் போதே சென்செக்ஸ் உட்பட எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன. மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் துவங்கும் போதே சென்செக்ஸ் 171.20 புள்ளிகள் சரிந்தது. இது மேலும் படிப்படியாக சரிந்து காலை 12.30 நிலவரப்படி 473.12 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 20 ஆயிரத்திற்கும் குறைந்து 19,777.97 ஆக இருந்தது. இதே போல் மிட் கேப் 177.31, சுமால் கேப் 259.72, பி.எஸ்.இ-500 200.28 புள்ளிகள் சரிந்தன.

இதே போல் தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி உட்பட எல்லா பிரிவு பங்குகளின் குறியீட்டு எண்களும் காலையில் இருந்தே சரிவை சந்தித்தன. தேசிய பங்குச் சந்தையில் காலையில் 12.30 மணியளவில் நிஃப்டி 174.74 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5899.49 ஆக இருந்தது. மற்ற பிரிவு பங்குகளின் குறியீட்டு எண் 0.80 முதல் 3.27 விழுக்காடு வரை குறைந்து இருந்தது.

பங்குச் சந்தை சரிவுக்கு காரணம் ரிலையன்ஸ் பவர் பங்குகளுக்கு விண்ணப்பிக்க, எல்லா தரப்பு முதலீட்டாளர்களும் பங்குகளை விற்பனை செய்கின்றனர். இதனால் தான் தொடர்ந்து எல்லா பங்குகளின் விலையும் குறைகின்றன என்று ஒரு பிரிவு வர்த்தகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாமல் ஆசியாவின் மற்ற நாட்டு பங்குச் சந்தைகளிலும் பங்கு விலைகள் குறைந்தன. இதே போல் அமெரிக்க பங்குச் சந்தைகளிலும் பங்கு விலைகள் குறைந்தன. சிங்கப்பூர் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் மட்டும் அதிகரித்து இருந்தது. மற்ற எல்லா நாட்டு பங்குச் சந்தைகளும் கடும் சரிவையே சந்தித்தன.

இன்று பங்குச் சந்தையில் இறுதி நேரத்தில் நிலைமை மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்ற கருத்தும் மார்க்கெட் வட்டாரங்களில் நிலவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்