பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்!

திங்கள், 7 ஜனவரி 2008 (12:01 IST)
மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் துவ‌ங்கு‌ம் போதே, சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டு எண்கள் சரிந்தன.

காலை வர்த்தகம் துவங்கிய 5 நிமிடத்தில் சென்செக்ஸ் 222.08 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 20,464.81 ஆக இருந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 58 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 6,216.85 ஆக இருந்தது.

பிறகு நிலைமை சிறிது முன்னேறியது. இரண்டு பங்குச் சந்தைகளிலும் பங்கு விலைகள் உயர ஆரம்பித்தன. ஆனால் மற்ற பிரிவுகளில் உள்ள பங்குகளின் விலை அதிகளவு பாதிக்கப்படவில்லை.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் காலை 11 மணி நிலவரப்படி 20.68 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 20,707.57 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 17.10 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 6,257.20 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையில் மிட் கேப் 55.61, சுமால் கேப் 212.01, பி.எஸ்.இ-500 28.26 புள்ளிகள் அதிகரித்திருந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர், பாங்க் நிஃப்டி, சி.என்.எக்ஸ் மிட் கேப், நிஃப்டி மிட்கேப் 50 தவிர மற்ற பிரிவு பங்குகளின் குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தன. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பிரிவு அதிகபட்சமாக 2.23 விழுக்காடு குறைந்து இருந்தது.

அந்நிய நாடுகளில் புது வருடத்திற்கு பிறகு சென்ற வாரம் முழுவதும் பங்கு விலைகள் குறைந்தே இருந்தது. ஆனால் இந்தியாவில் கடந்த வாரம் முதல் நான்கு நாட்கள் பங்குகளின் விலைகள் குறைந்தாலும், வெள்ளிக் கிழமை இரண்டு பங்குச் சந்தைகளிலும்,.இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

இன்று பல முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்து இலாபம் கணக்கிட துவங்கியதால், காலையிலேயே பங்கு விலைகள் சரிந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். காலையில் வர்த்தகம் துவங்கிய போது இருந்த நிலைமை, மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக வர்த்தகர்கள் கருதுகின்றனர். மற்றொரு தரப்பு வர்த்தகர்கள் சென்செக்ஸ், நிஃப்டி பிரிவு பங்குகளின் விலைகள் அதிகமாக இருக்கின்றன. இவைகள் குறையும் என்று கணிக்கின்றனர்.

அமெரிக்க பங்குச் சந்தை குறியீட்டு எண்களான நியூயார்க் கம்போசிட் 2.32, நாஸ்டாக் கம்போசிட் 3.77 விழுக்காடு குறைந்தது. அதே போல் ஜப்பானின் நிக்கி 0.99, ஹாங்காங்கின் ஹாங்சாங் 2.74, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 2.42 விழுக்காடு குறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்