பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்நாட்டு பங்குச் சந்தை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது.
பாகிஸ்தானில் கடந்த சனிக்கிழமை அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. திங்கட் கிழமை பாகிஸ்தானில் பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது, பங்குகளின் விலை குறைந்து, அதன் குறியீட்டு எண் 230 முதல் 300 வரை குறையும் என்ற எதிர்பார்ப்பு நிதி நிபுணர்கள் மத்தியில் நிலவியது.
ஆனால் எல்லோரும் அதிர்ச்சி அடையும் வகையில், பங்குச் சந்தையின் குறியீட்டு எண் பிரிவில் உள்ள 100 பங்குகளின் விலை சரிந்தது. இதன் குறியீட்டு எண் 635 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது.
பாகிஸ்தான் பங்குச் சந்தை வரலாற்றில் இது வரை ஒரே நாளில், குறியீட்டு எண் 635 புள்ளிகள் வரை சரிவு ஏற்பட்டதில்லை. இதற்கு முன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 548 புள்ளிகள் சரிந்தது.
இந்த வீழ்ச்சிக்கு காரணம் திங்கட் கிழமை அரசின் மிக முக்கிய பதிவிகளில் உள்ளவர்கள் மாற்றப்படுவார்கள் என்ற தகவல் காட்டூத்தீ போல் பரவியதால், பங்குகளில் முதலீடு செய்திருந்தவர்கள், வந்த வரை லாபம் என்ற மனநிலையில், பங்குகளை விற்க ஆரம்பித்தனர். இதனால் நிமிடத்திற்கு நிமிடம் பங்குகளின் விலை குறைந்து, குறியீட்டு எண் வீழ்ச்சி அடைந்தது.
அதே நேரத்தில் பங்கச் சந்தையில் நீண்ட காலமாக, அதிக அளவு முதலீடு செய்திருந்தவர்கள் அவசரப்பட்டு விற்பனை செய்யவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் என்று அமைதியாக இருந்தனர்.
கராச்சி பங்குச் சந்தையின் மேலாண்மை இயக்குநர் அட்னான் அப்ரிடி கூறுகையில், பங்குச் சந்கதையில் இடர்பாடு இருப்பது உண்மைதான். இவை கூடிய விரைவில் சரியாகிவிடும். எந்த ஆபத்தும் இல்லை என்று கூறினார்.இவர் கடந்த மாதம் தான் கராச்சி பங்குச் சந்தையின் மேலாண்மை இயக்குநராக பொறுப்பேற்றார்.
பாக்கிஸ்தானின் முன்னணி பரஸ்பர நிதியான என்.ஐ.டி மியூச்சுவல் பண்டின் மேலாண்மை இயக்குநர் தாரிக் இக்பால் கான் கூறுகையில், நான் எங்களது யூனிட்டில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு பதில் கூறவேண்டும். நஷ்டத்தில் விற்பனை செய்ய விரும்பவில்லை. பங்குச் சந்தையில் பணப்புழக்கம் அதிகளவு இருக்கின்றது. இப்போது விற்பனை செய்யவில்லை என்றால், சில மாதங்கள் கழித்து விற்பனை செய்ய முடியாது என்று அவசரப்பட்டு நஷ்டமடைய விரும்வில்லை என்று கூறினார். இவரின் மியூச்சுவல் பண்ட் நிறுவனம் சுமார் ரூ. 10,400 கோடி.யை நிர்வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கராச்சி பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த அந்நிய நாட்டு நிறுவனங்கள், அவர்கள் வசம் உள்ள பங்குகளை விற்பனை செய்துவிட்டு, பாகிஸ்தானில் இருந்து முதலீட்டை, வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லும் அறிகுறிகள் தெரிகிறது. ஆனால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள். எவ்வளவு டாலரை வெளிநாடுகளுக்கு கொண்டு சென்றுள்ளன என்பதை துல்லியமாக கூற முடியவில்லை. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பாகிஸ்தான் பங்குச் சந்தையில் சுமார் 3500 கோடி டாலர் அளவிற்கு முதலீடு செய்துள்ளன. இது பங்குச் சந்தையின் மதிப்பில் 7 விழுக்காடாகும்.
கே.ஏ.எஸ்.பி செக்யூரிட்டிஸ் என்ற முதலீட்டு நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் முஜாமில் அஸ்லாம் கருத்து தெரிவிக்கையில், பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ள அந்நிய முதலீடு அதிகளவில் நாட்டை விட்டு வெளியேறும் என்று நான் கருதவில்லை. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அவசர நிலை, முன்பு 1990 ஆம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட ஆவசரநிலை பிரகடனத்தில் இருந்து வேறுபட்டது. முன்பு ஊழலில் திளைத்த அரசுகள் அப்புறப்படுத்தப்பட்டு அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இப்போது நீதித்துறை மட்டும் தான் ஓரங்கட்டப்பட்டுள்ளது. தற்போது அரசு செயல்பட்டுக் கொண்டுள்ளது. இந்த அரசு அந்நிய முதலீடு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு காரணமான தற்போது கடை பிடிக்கப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்த கொள்கைகளை மாற்ற போவதில்லை. இதனால் பீதி அடைய தேவையில்லை. திங்கட் கிழமை பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்ததற்கு காரணம் அவசரப்பட்டு பங்குகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்தததே என்று கூறினார்.