டாலர் மதிப்பு அதிகரிப்பு!

Webdunia

செவ்வாய், 30 அக்டோபர் 2007 (13:34 IST)
இன்று வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 பைசா குறைந்தது.

பெட்ரோலிய எண்ணை நிறுவனங்கள் அதிகளவு டாலரை வாங்கியதாலும், ஆசிய நாட்டு பங்குச் சந்தையின் விலைப் புள்ளிகள் குறைந்த காரணத்தினாலும் டாலரின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

காலையில் அந்நியச் செலவாணி சந்தை திறந்தவுடன் 1 டாலர் ரூ.39.41/43 என்ற அளவில் இருந்தது. (நேற்றைய இறுதி நிலவரம்: 39.42/43). ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு இந்திய ரூபாயின் மதிப்பு 6 பைசா குறைந்து டாலரின் விலை ரூ.39.48/49 ஆக இருந்தது.

சர்வதேச சந்தையில் (பெட்ரோலிய) கச்சா எண்ணை விலை அதிகரித்து வருகிறது. நேற்று 1 பீப்பாய் கச்சா எண்ணை விலை 93.80 டாலராக அதிகரித்தது. இதன் விலை கூடிய விரைவில் 100 டாலராக அதிகரித்து விடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க மற்ற நாடுகளையும் நிர்ப்பந்திப்பதாலும், ஈராக்கில் அதிகரித்து வரும் பதற்றத்தாலும் மேற்கு ஆசியாவில் கச்சா எண்ணை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பாதிக்கப்படலாம். இதனால் பெட்ரோலிய கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்