துறைமுகம்-நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்-2008

செவ்வாய், 30 டிசம்பர் 2008 (16:26 IST)
புது தில்லி: 2008 ஆம் ஆண்டு கப்பல் போக்குவரத்து துறையிலும், துறைமுகங்களின் மேம்பாட்டு பணியிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அமைப்பது, இந்திய கப்பல் கழகத்திற்கு நவரத்தினா அந்தஸ்து கிடைத்தது, கடலோடிகளை (மாலுமிகளை) பாதுகாக்கும் நடவடிக்கைகள், இந்திய கப்பல் கழகம் மூன்று புதிய கப்பல்களை வாங்கியது ஆகியவற்றை குறிப்பிடலாம்.

அத்துடன் 30 கலங்கரை விளக்கங்களை தானியங்கி முறையில் இயங்கும் படி மாற்றியதுடன், நான்கு புதிய கலங்கரை விளக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சுற்றுலா கப்பல் கொள்கைக்கு அனுமதி மற்றும் புதிய தேசிய நீர்வழிச் சாலைகளை அறிவித்தது உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் கப்பல் துறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்திய கடல்சார் பல்கலைக் கழகம்
கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்ற சட்டத்தின்படி சென்னையில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன் கிளை வளாகங்கள் கொல்கத்தா, மும்பை, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் இருக்கும்.




இந்த பல்கலைக்கழகத்தின் நோக்கம் கடல்சார் கல்வி, ஆய்வு மற்றும் விரிவாக்கப் பணிகளை ஊக்குவிப்பதே.

தற்போது ஏராளமான தனியார் நிறுவனங்கள் கடல்சார் கல்வி மற்றும் பயிற்சி அளித்து வருகின்றன. அவற்றை ஒருங்கிணைத்து, தரம் உயர்த்தி நிர்வகிப்பதும் இந்த பல்கலைக்கழகத்தின் பணியாகும். இந்த பல்கலைக் கழகத்துடன் தற்போதுள்ள 7 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கடல்சார் பயிற்சி மற்றும் ஆய்வு மையங்கள் இணைக்கப்படும்.
இந்த பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகே உத்தண்டியில் அமைக்கப்படுகிறது.

கடலோடிகளின் பாதுகாப்பு

இந்திய கடலோடிகளின் (மாலுமிகள்) பாதுகாப்பு தற்போது அதிகம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயமாகவுள்ளது. கடல் பயணத்தின் போது மரணம் உள்ளிட்ட ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் பொருட்டு அதை யு.என்.சி.எல்.ஓ.எஸ் பிரிவு 94(7)-ன் கீழ் விசாரித்து முடிவு எடுப்பது அந்தந்த நாடுகளின் கடமையாகும்.

இந்த விஷயத்தில் கப்பல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது சர்வதேச கடல்சார் அமைப்புக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒருங்கிணைந்த சர்வதேச முடிவுகளை மேற்கொள்ளவும், அந்தந்த கப்பல்களுக்கு சொந்தமான நாடுகளை தங்களது பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சட்டங்களை கடுமையாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேசிய கடல்சார் வளாகம

இந்திய கடல்சார் தொழில் துறையின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் பொருட்டு சென்னையில் தேசிய கடல்சார் வளாகம் அமைக்கப்படவுள்ளது. இந்த வளாகம் உலகளாவிய கடல்சார் தொழிலின் மையமாக விளங்கும். அத்துடன் இங்கு முக்கியமான கடல்சார் பாரம்பரிய விஷயங்கள் இடம் பெற்றிருக்கும்.

சுற்றுலா கப்பல் கொள்க

இந்த ஆண்டு சுற்றுலா கப்பல் கொள்கைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. சர்வதேச அளவில் இந்தியா ஒரு சிறந்த கப்பல் சுற்றுலா தளமாக விளக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த சுற்றுலா கப்பல் கொள்கை அனைத்து அமைச்சகங்கள், பெரிய துறைமுகக் கழகங்கள், கடல்சார் நிறுவனங்கள், உள்ளிட்ட அனைவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுற்றுக்கு விடப்பட்டுள்ளது.

இந்த கொள்கையை செயல்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி இந்த கொள்கை விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து

இந்த ஆண்டு (2008) இரண்டு உள்நாட்டு நீர்வழித் தடங்கள் புதிய தேசிய நீர்வழித்தடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது காக்கிநாடா - புதுச்சேரி வரையிலான கால்வாய் மற்றும் கலுவலிகுளம், கோதவரி ஆற்றில் பத்ராச்சலம் - ராஜமுந்திரி வரையான கால்வாய். கிருஷ்ணா ஆற்றில் வசிராபாத் - விஜயவாடா வரையான கால்வாய் (1095 கி.மீ)

இரண்டாவதாக பாமினி ஆற்றில் தல்சேர் - தம்முரா வரை, கிழக்கு கடற்கரை கால்வாயில், கங்கலி - சர்பாஷியா, மதாயி ஆற்றில் சர்பஷியா - தம்முரா வரையான கால்வாய் மற்றும் மகாநதி ஆற்றில் மங்கள்காடி - பாரதீப் வரையான கால்வாய் ( 623கி.மீ).

இவை தவிர ஹால்தியாவில் இருந்து பராக்கா/கல்கோவன்/பாரா வரை நீர்வழித்தடம் மூலம் நிலக்கரி எடுத்துச் செல்லும் வகையில் இந்திய நீழ்வழி ஆணையத்திற்கும், தேசிய அனல்மின் நிலைய கழகத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்திய கப்பல் கழகம்

இந்திய கப்பல் கழகத்திற்கு மத்திய அரசு “நவரத்தினா” அந்தஸ்து வழங்கியுள்ளது. இது நவரத்தினா பட்டியலில் சேரும் 17 வது மத்திய பொதுத் துறை நிறுவனமாகும். தேசிய கடல்சார் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக 11 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 62 புதிய கப்பல்களை இணைத்துக் கொள்வதை இலக்காக இந்த கழகம் கொண்டுள்ளது.

சர்வதேச ஒத்துழைப்பு

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா, நெதர்லாந்து ஆகிய இரு நாடுகளுக்கு இடையே துறைமுகம் மற்றும் கடல்சார் போக்குவரத்து நடவடிக்கைகளை மேம்படுத்தும் பொருட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதேபோல் கடல்சார் போக்குவரத்து திட்டத்தை மேம்படுத்தும் விதமான ஒரு ஐந்தாண்டு திட்டம் வகுக்கப்பட்டு இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் தரம் மற்றும் முத்தரப்பு நன்மை விளைவிக்கும் வகையில் கடல்சார் உறவுகள் மேம்படும்.

கலங்கரை விளக்கங்கள்

கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கு உதவியாக மினிக்காய் (லட்சத்தீவு), கொனாவர் (கர்நாடகா), இஸ்கபள்ளிப்பாலம் (ஆந்திரா) மற்றும் மாயாபந்தர் (அந்தமான் நிகோபார்) ஆகிய இடங்களில் நான்கு புதிய கலங்கரை விளக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தவிர ஐந்து ரிமோட் கட்டுப்பாட்டு மையங்களுடன் மும்பை கலங்கரை விளக்க மண்டலத்தை (28 கலங்கரை விளக்கங்கள்) தானியங்கியாக

மாற்றியது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மூன்று ரிமோட் கட்டுப்பாடு மையங்களுடன் போர்ட் பிளேயர் கலங்கரைவிளக்க மண்டலத்தை (30 கலங்கரை விளக்கங்கள்) தானியங்கியாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் மாதம் வரை கலங்கரை விளக்கங்கள் மூலம் ரூ.116 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இரண்டு சர்வதேச அளவிலான கப்பல் தளங்கள்

இந்தப் பணிக்காக மத்திய அரசு எண்ணூர் துறைமுக கழகத்தையும் மும்பை துறைமுக கழகத்தையும் பிரதிநிதிகளாக நியமித்துள்ளது. எண்ணூர் துறைமுக கழகம் கிழக்கு கடற்கரைக்கும், மும்பை துறைமுக கழகம் மேற்கு கடற்கரைக்கும் மாற்று கப்பல் தளங்கள் அமைக்கும் இடங்களை தேர்ந்தெடுத்தும் கூறும் ஆலோசகர்களை நியமிக்கும். இந்த ஆலோசகர்களை தேர்ந்தெடுக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

துறைமுக பிரிவு

எண்ணூர் துறைமுகம் 8 எம்டிபிஏ இரும்புத் தாது முனையங்கள் அமைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுடன் ஒப்பந்தம் கையயெழுத்திட்டுள்ளது. இதன் திட்டச் செலவு ரூ.348 கோடி மற்றும் ரூ.480 கோடியாகும். இத் திட்டத்திற்காக அகழ்வுப் பணி பகுதி மேற்கொள்வதற்காக ரூ.90 கோடிக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டத்திற்கான உள்கட்டமைப்பு பணிகள் நவம்பர் மாதம் வரை 80 விழுக்காடு முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சாலைத் தொடர்பு மேம்பாட்டுப் பணிகள்

தேசிய நெடுஞ்சாலை எண் 4 இல் சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை 18.3 கி.மீ நீளத்திற்கு நான்கு வழி பறக்கும் சாலையும், சென்னை-எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலை 29.3 கி.மீ நீளத்திற்கு ரூ.309 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேசிய நெடுஞ்சாலை 45பி-இல் தூத்துக்குடி முதல் மதுரை வரையிலான 144 கி.மீ நான்கு

வழிப்பாதைக்கு ரூ.629 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலை அமைக்கும் பணி 2010 ஆம் ஆண்டிற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் வகையில் மதுரை-திண்டுக்கல் இருவழி ரயில் பாதை (62.06 கி.மீ). இந்த திட்டத்திற்கு ரூ.126 கோடி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன் அம்பாதுரை-கொடைரோடு இருவழி பாதையும் இணைந்து முடிக்கப்படும்.

எண்ணூர் துறைமுகத்தை இணைக்கும் வகையில் புத்தூர்-அத்திப்பட்டு கார்டு லைன் (144 கி.மீ). ரூ.435 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

இவை தவிர, பெரிய துறைமுகங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு இடையே ஒப்பந்தம் செய்ய ஒரே மாதிரி விதிமுறைகள் இருக்கும் வகையில் மாதிரி ஒப்பந்தங்கள், புதிய வரி விதிப்பு வழிகாட்டிகள் பெரிய துறைமுகங்களை இணைக்கும் வகையிலான ரயில் பாதை இணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் 2008 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்