இந்திய பங்குச் சந்தைகளில் தற்போது உள்ள சூழ்நிலையை பார்த்தால், இந்திய பங்குச் சந்தை உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. பங்கு முதலீட்டாளர்களின் மனநிலை பங்குகளை வாங்கும் நிலையில் இல்லை. இதனால் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் செலுத்துவதில்லை. இதனால் ஜனவரியிலும், மார்ச் மாதங்களிலும் அதிகரித்த குறியீட்டு எண்கள் குறைந்து விட்டது.
பங்குச் சந்தையில் யாரும் புதிதாக பங்குகளை வாங்குவதில்லை, யாரும் புதிதாக முதலீடு செய்வதில்லை. பங்குச் சந்தையின் குறியீடு எண்கள் அதிகரிக்கும் போதெல்லாம், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ச்சியாக பங்குகளை விற்பனை செய்கின்றன. எல்லோருமே பங்குகளின் விலை அதிகமாக இருக்கும் போது, விற்பனை செய்துவிட்டு வெளியேறவே விரும்புகின்றனர்.
எனவே பங்குச் சந்தை உயர்வதற்கான வாய்ப்பு இல்லை. கச்சா எண்ணெய் விலை உயர்வும், பெட்ரோல் விலை உயர்வும் பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும். அடுத்த இரண்டு வாரங்களில் பணவீக்கம் 9.5 விழுக்காடாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வட்டி வருவாய் குறையும்.
இதன் விளைவாக வட்டி விகிதம் அதிகரிக்கும். ரிசர்வ் வங்கியில் வங்கிகள் வைக்கும் ரொக்க இருப்பு விகிதமும் அதிகரிக்கும. இந்த வருடம் நிறுவனங்கள் எவ்வளவு வருவாய் திரட்ட வேண்டும் என்று திட்டமிட்டு இருந்ததோ, அந்த அளவு வருவாய் இருக்காது. இதனால் இந்த முதல், இரண்டாவது காலாண்டு வருவாய் குறையும்.
கடந்த சில வருடங்களில், இந்தியாவில் மட்டுமில்லாது மற்ற ஆசிய நாடுகளிலும், உலகம் முழுவதும் பெட்ரோலிய எண்ணெய் விலைகள் கடுமையாக அதிகரித்ததைப் பார்த்தோம். இதனால் பங்கு சந்தையில் கேட்பு குறைவாக இருந்தது. அதிக விலை உள்ள பங்குகளின் விலையை எவ்வாறு சரியாமல் காத்து கொள்வது என்ற கவலையே பங்குச் சந்தையில் ஈடுபடுவர்கள் மத்தியில் இருந்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் குறைவாக இறங்கும் வரை இதே கவலைதான் இருக்கும்.
கடந்த சில நாட்களில் பங்குச் சந்தையின் போக்கை பார்த்தால், முன்னணி நிறுவனங்களின் பங்கு விலைகள் ஜனவரி,. மார்ச் மாதங்களில் இருந்த நிலைக்கு குறைந்து விட்டது. மற்ற பங்கு விலைகளும் சரிந்துவிட்டது. நிஃப்டி குறியீட்டு எண் 4,450 என்ற அளவிற்கு குறைந்து விட்டது. இது மார்ச், ஜனவரி மாதங்களில் இருந்த மிக குறைவான அளவை விட 100-150 புள்ளிகளே குறைவாக உள்ளது.
இப்போதுள்ள சூழ்நிலையில் நிஃப்டி குறைந்த காலத்திற்கு குறைய வாய்ப்பு உள்ளது. நிஃப்டி 4,500-4,440 என்ற அளவில் இருக்கும். இதை விட குறைந்தால் 4,340-4,200 என்ற அளவிற்கு குறைய வாய்ப்பு உண்டு.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 4,800-4,950 என்ற அளவிற்கு அதிகரித்தால், பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காண்பிப்பதை பார்க்கலாம். பங்குச் சந்தையின் மீது முதலீட்டாளர்கள், வர்த்தகர்களுக்கு சிறிது நம்பிக்கை பிறக்கும்.
தற்போது நிலவும் போக்கை பார்த்தால் “பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இல்லை”. இது வர்த்தகம் நடக்கும் சந்தை மட்டுமே.