பங்குச் சந்தை சரிவுக்கு காரணம், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்து விட்டு, தங்களின் முதலீட்டை மற்ற நாடுகளுக்கு கொணடு செல்வதல்ல. அவர்கள் முதலீடு திரும்ப பெறுவதை கண்காணிக்க தேவையில்லை.
இந்திய பங்குச் சந்தையின் அந்நிய முதலீட்டு நிறுவனங்களால் பாதிப்பு ஏற்படும் வகையில் அவர்களின் முதலீடு இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
இன்று மாநிலங்களவையில், பா.ஜ.கட்சியின் உறுப்பினர் சுஷ்மா சுவராஜ், பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண் குறைவதற்கு காரணம், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் முதலீட்டை திரும்ப பெறுவதா? இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டார்.
இதற்கு பதிலளிக்கையில் சிதம்பரம் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், பங்குச் சந்தையின் சரிவுக்கு அமெரிக்க மறு கடன் சந்தையில் நெருக்கடி, அமெரிக்க பொருளாதார நெருக்கடி, வளர்ந்த நாடுகளின் பொருளாதார கொள்கையில் மாற்றம், பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை ஏற்றம் உட்பட பல காரணங்கள் உள்ளன.
இத்துடன் யென் நாணயத்தில் வர்த்தகம் நடப்பது, பங்குச் சந்தையை கண்காணிக்கும் செபி முன் பேர சந்தையில் டிரைவடிவ் பற்றிய விதிமுறைகளை மாற்றியது. மற்ற வளரும் நாடுகளின் பங்குச் சந்தைகளின் தாக்கம் ஆகியவைகளும் காரணங்கள்.
இத்துடன் இந்திய பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு மிக குறைந்த அளவே உள்ளது. செபி ஒவ்வொரு துறை வாரியாக அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்க உயர்ந்தபட்ச அளவை நிர்ணயித்துள்ளது.
எனவே அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்கு தடை விதிக்கவோ, அவைகள் முதலீட்டை திரும்ப பெறுவதற்கு காண்காணிக்கும் எண்ணம் இல்லை.
பங்குச் சந்தையை கண்காணிக்கும் அமைப்புகள் அதன் குறியீட்டு எண்கள் அதிகரிப்பது, அல்லது குறைவதை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவதில்லை. அவர்கள் ஒளிமறைவு இல்லாமல், பங்குச் சந்தையின் முறையாக இயங்கும் அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், சிறு முதலீட்டாளர்கள் உட்பட எலலா தரப்பினரும் பொருளாதாரம், குறிப்பிட்ட துறை, நிறுவனத்தை பற்றி என்ன கருதுகின்றார்களோ அதை பொறுத்து குறியீட்டு எண்கள் உயரும் அல்லது குறையும்.
ஒரு குறிப்பிட்ட முதலீட்டாளரின் இலாபம் அல்லது நஷ்டம் என்பது அவரின் முதலீட்டு தன்மையை பொறுத்தே அமையும் என்று கூறினார்.