பெட்ரோல், டீசல் விலை உயர்த்த ஆலோசனை! தடுப்பாரா சோனியா?
சனி, 8 டிசம்பர் 2007 (14:31 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது!
பெட்ரோலிய பொருட்கள் விற்பனையால் ஏற்பட்டு வரும் நஷ்டம் அதிகரித்து கொண்டு வருகிறது. இதனால் பெட்ரோலிய அமைச்சகம் பெட்ரோல், டீசலின் விலையை உயர்ததவும், இதன் மீதான உற்பத்தி வரியை குறைக்கவும் ஆலோசித்து வருகிறது. விலை உ.யர்த்துவது பற்றிய இறுதி முடிவு குஜராத் மாநில சட்டபேரவை தேர்தலுக்கு பிறகு எடுக்கப்படலாம் என்று பெட்ரோலிய அமைச்சக உயர் அதிகாரி தெரிவித்தார்.
பெட்ரோல் உட்பட பல்வேறு பொருட்களின் விலையை பற்றி பரிசீலிக்க அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் குழுவின் முதல் கூட்டம் டிசம்பர் 14 ந் தேதி நடைபெற உள்ளது. இந்த அமைச்சர்கள் குழு அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலைக்கு தகுந்தாற்போல் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த அனுமதி அளிக்காத காரணத்தால், பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது.
பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் மானிய விலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விற்பனை செய்வதால் ஆண்டிற்கு ரூ.69,753 கோடி இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பெட்ரோல் அடக்க விலையை விட ஒரு லிட்டருக்கு ரூ.8.74 பைசா குறைவாகவும், டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.9.92 பைசா குறைவாகவும், மண் எண்ணெய் லிட்டருக்கு ரூ.20.53 பைசா, சமையல் எரிவாயு 14.5 கிலோ சிலிண்டருக்கு ரூ.256.35 குறைவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அடக்க விலையை விட குறைவான விலைக்கு விற்பனை செய்வது, பெட்ரோலிய நிறுவனங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு நல்லதல்ல.
இவைகளினால் எதிர்காலத்திற்கு தேவையான முதலீடு செய்யவும், நுகர்வோருக்கு சேவை செய்யவும் இயலாமல் போய்விடும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
2006 ஆம் ஆண்டு ஜீன் 6 ந் தேதி கடைசியாக பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. சர்வதேச சந்தையில் அப்போது இருந்த பெட்ரோலிய கச்சா எண்ணெய்யின் விலையை விட, தற்போது விலை 1 பீப்பாய்க்கு (158.98 லிட்டர்) 22 டாலர் அதிகரித்துள்ளது.
பெட்ரோலிய நிறுவனங்கள் மானிய விலையில் விற்பனை செய்வதால் ஏற்படும் இழப்பை மத்திய அரசு ஈடுகட்டுகிறது. மற்றொருபுறம் பெட்ரோல், டீசல், மண் எண்ணெய், சமையல் எரிவாயு உட்பட பெட்ரோலிய பொருட்களால் மத்திய அரசுக்கு இறக்குமதி வரி, உற்பத்தி வரி, விற்பனை வரி, இந்த வரிகளின் மீது கூடுதல் வரி போன்றவைகளால் கணிசமான வருவாய் வருகிறது.
கச்சா விலை உயர்வால் மத்திய அரசுக்கு கூடுதல் வருவாய்!
மத்திய அரசுக்கு சென்ற நிதி ஆண்டில் (2006-07) பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களில் இருந்து பல்வேறு வரிகள் மூலம் வருவாய் ரூ.93 ஆயிரத்து 800 கோடி கிடைத்துள்ளது.
இந்த வரி வருவாயில் மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியற்றை அடக்க விலையை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் வகையில் மானியமாக 28 விழுக்காடு மட்டுமே வழங்குகிறது. மத்திய அரசு இறக்குமதி வரியாக ரூ.51,922 கோடி வசூலித்துள்ளது. இதில் சமையல் எரிவாயுக்கான மானியமாக ரூ.2,523.76 கோடி மட்டுமே வழங்கியுள்ளது. பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிக்கட்ட, அவைகளுக்கு ரூ.24,121 கோடி மதிப்புள்ள ஆயில் பாண்ட் எனப்படும் நிதி உறுதி பத்திரத்தை வழங்கியுள்ளது (மத்திய அரசு உடனடியாக பணம் வழங்குவதற்கு பதிலாக ஆயில் பாண்டுகளை வழங்குகி அதற்கு சமமான தொகையை எதிர்காலத்தில் அரசு வழங்குவதாக உறுதி அளிக்கிறது).
மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்து மூலமாக பதிலளிக்கும் போது மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்ததாவது:
“மத்திய அரசுக்கு கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி வரி மூலம் 10,043 கோடி வருவாய் கிடைக்கிறது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது விதிக்கப்படும வரி மூலம் ரூ.2,794 கோடி, ராயல்டி மூலம் ரூ.12,153 கோடி, பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் நிறுவன வரி மூலம் ரூ.12,153 கோடி, பங்கு ஈவுத் தொகையாக ரூ.7,963 கோடி கிடைக்கிறது என்று தெரிவித்தார்.
இவைகளுடன் சேவை வரி போன்ற வரிகளை சேர்த்தால் மத்திய அரசுக்கு பெட்ரோலிய நிறுவனங்களிடம் இருந்து சென்ற நிதி ஆண்டில் ரூ.93 ஆயிரத்து 802 கோடி வருவாயாக கிடைத்துள்ளது.
இத்துடன் மாநில அரசுகளும் பெட்ரோலிய பொருட்கள் மீது விற்பனை வரி விதிக்கின்றன. இந்த வரி மூலம் மாநில அரசுகள் சென்ற நிதி ஆண்டில் ரூ.62 ஆயிரத்து 121 கோடி வருவாயை பெற்றுள்ளன.
பெட்ரோலிய பொருட்களின் மீது மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு வரிகளை விதித்து சென்ற நிதி ஆண்டில் மொத்தம் ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 923 கோடி வருவாயாக பெற்றுள்ளன என்பது கருத்தில் கொள்ளத்தக்கது.
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வதால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் அரசு இருப்பதாக அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அடிக்கடி கருத்து தெரிவிக்கின்றனர். இவைகளின் விலையை உயர்த்தாமல் இருக்க மத்திய அரசு, மாநில அரசுகள் விதிக்கும் வரியை குறைத்தாலே போதுமானது.
ஏனெனில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை உயர்வு அதனை நேரடியாக வாங்கி பயன்படுத்துபவர்களை மட்டும் பாதிப்பதில்லை. இதனால் போக்குவரத்து கட்டணம், சரக்கு கட்டணம் அதிகரிக்கும். இதன் விளைவாக உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும். நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையே பாதிக்கும்.
சோனியா மீண்டும் சொல்வரா?
எனவே மத்திய, மாநில அரசுகள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்றத்தை ஈடு செய்யும் வகையில், இதன் மீது விதிக்கும் பல்வேறு நேரடி, மறைமுக வரியை குறைக்க வேண்டும். இவைகளின் மீது மத்திய அரசு சென்ற நிதி ஆண்டில் வரி வருவாயக ரூ.1 பெற்றுள்ளது என்றால், விலை அதிகரிக்காமல் இருக்க மானியமாக 0.28 பைசா கொடுத்துள்ளது. இந்த மானியத்தை 50 பைசாவாக உயர்த்தும் அளவிற்கு வரிகளை குறைத்தாலே போதுமானது. கச்சா எண்ணெயின் விலை உயர்வால் எந்த பகுதி மக்களும் பாதிக்கப்படாமல் பாதுகாக்க முடியும்.
இதை காங்கிரஸ் கட்சி தலைவரும், மத்திய ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவருமான சோனியா காந்தி உணர்ந்துள்ளார் என்றே தெரிகிறது.
ஏனெனில் சென்ற மாதம் நவம்பர் 22 ஆம் தேதியன்று மக்களையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா, “ பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டாம் என்று சோனியா காந்தியிடமிருந்து கட்டளை வந்ததால் விலை உயர்வு முடிவை நிறுத்திவைத்தோம்” என்று தெரிவித்தார். இப்போதும், எப்போதும் சோனியா காந்தியின் கட்டளையை நினைவில் வைத்துக் கொண்டு காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவைகளின் விலையை உயர்த்தாமல் இருக்க வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், அதை ஈடுகட்டும் வகையில் பெட்ரோலிய பொருட்களின் மீது விதிக்கும் வரியை குறைக்க வேண்டும். இதுவே ஆம் ஆத்மிக்களின் (சாமானிய மக்களின்) எதிர்பார்ப்பு.