பங்குச் சந்தை : பார்டிசிப்பேட்டரி நோட் மிரட்டல்?

Webdunia

வியாழன், 18 அக்டோபர் 2007 (19:04 IST)
webdunia photoPTI
மும்பை பங்குச் சந்தையில் நேற்று காலையில் வர்த்தகம் தொடங்கிய பத்து நிமிடத்திலேயே 1,703 புள்ளிகள் சரிந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டியும் 524 புள்ளிகள் சரிந்தது. இதனால் இரண்டு பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் ஒரு மணிநேரம் நிறுத்தப்பட்டது.

இதற்கு காரணம் என்ன?

செபி என்று சுருக்கமாக அழைக்கப்படும் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம் (செக்யூரிட்டிஸ் அண்ட் எக்சேஞ்ச் ஆப் இந்தியா) என்ற அமைப்பு 1992 ஆண்டுகளில் அந்நிய முதலீட்டு நிறுவனங்களை (FII) இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதித்தது. இவர்கள் தங்களின் முதலீட்டில் இருந்து இந்திய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வார்கள் என்று நினைத்தனர்.

அந்த நேரத்தில் பொருளாதார சீர்திருத்தம் காரணமாக அந்நிய நிறுவனங்களை எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் மூலதனச் சந்தையில் நுழைய அனுமதிப்பது எதிர்காலத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று சில குரல்களும் எழுந்தன. ஆனால் இவர்களை பத்தாம் பசலிகள் என்று ஏளனம் செய்து, அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இவர்களின் தாக்குதலை எல்லாம் தாக்குப்பிடித்து நிமிர்ந்த நடை போடும் ஆற்றல் இந்திய பொருளாதாரத்திற்கு உண்டு என்று நெஞ்சை நிமிர்த்தி பதில் கூறினார்கள். இதற்கு உதாரணமாக மற்ற ஆசிய நாடுகளில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டாலும் இந்தியாவில் எந்த பாதிப்பும் இல்லை என்று உதாரணத்துடன் இந்த பொருளாதார புலிகள் பதிலளித்தனர்.

ஆனால் அந்த நேரத்தில் இந்திய மூலதனச் சந்தையில் அந்நிய மூலதனம் கண்ணுக்கு தெரியாத அளவே இருந்தது என்பதை வசதியாக மறந்து விட்டு பதிலளித்தனர். அந்நிய முதலீட்டு நிறுவனங்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றவர்களே இப்போது சில கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் அமல் படுத்த எண்ணினார்கள்.

இதன் ஒரு அம்சம் தான் செவ்வாய்க் கிழமை மாலையில் செபி அமைப்பு சில கட்டுப்பாடுகளை விதிக்க எண்ணியுள்ளதாக அறிவித்தது. இதன்படி பார்ட்டிசிபேட்டரி நோட் மூலம் அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் வாயிலாக இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்பவர்கள் செபியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அதே போல ஃப்யூச்சர் டிரேடிங் ஈடுபட அந்நிய மூதலீட்டு நிறுவனங்கள் பார்டிசிபேட்டரி நோட் மூலம் பங்கு பெறுவதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று செபி கூறியது.

இவை எல்லாம் உடனயாக அமல்படுத்தப் போவதில்லை. செபி செவ்வாய் கிழமை அறிவித்தது ஆலோசனைக்கான அறிவிப்புதான்.

தனிப்பட்ட பெரும் செல்வந்தர்களிடம் உள்ள பணத்தை மூதலீட்டு நிறுவனங்கள் பெற்று இந்த பார்டிசிபேட்டரி நோட் மூலம் பங்குகளை வாங்குகின்றன. இதை சரியாக கூறுவது என்றால் அடையாளம் தெரியாத மூன்றாவது மனிதருக்காக அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குகின்றன. அதே போல் விற்பனை செய்கின்றன. சில நிறுவனங்களின் மீது இவர்களுக்கு (மூனறாவது மனிதருக்கு) உள்ள விருப்பு வெறுப்பின் படி, குறிப்பிட்ட பங்குகளின் விலைகளை அதிகரிக்கவும், குறைக்கவும் முடிகிறது. இதை வேறு விதமாக கூறுவதென்றால், ஒரு நிறுவனத்தின் அல்லது சில நிறுவனங்களின் மிக குறைந்த விழுக்காடு பங்குகளை வாங்கி, அதன் விலையை அதிகரித்து அல்லது குறைத்து பங்குகளின் விலை நிலவரத்தையே மாற்றி அமைக்கலாம்.

இவர்கள் பெரும்பாலும் பங்குகளை வாங்குவதில்லை. ப்யூச்சர் டிரேடிங் என அழைக்கப்படும் முன் பேர வர்த்தக முறையில் பங்குகளில் முதலீடு செய்கின்றனர். இந்த பங்குகளின் விலையில் மிக குறைந்த விழுக்காடு பணமே செலுத்தி பங்குகளை வாங்குகின்றனர்.

முன் பேர வர்த்தகத்தில் நிர்ணயிக்கப்படும் விலை, உடனே ரொக்கம் கொடுத்து வாங்கும் பங்குகளின் விலையில் பிரதிபலிக்கும். பங்குகளின் விலைகள் சரியும் போது, முன் பேர வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்கு இழப்பு மிக சிறிய தொகையாக இருக்கும். அதே நேரத்தில் ரொக்கமாக பணம் கொடுத்து பங்குகளை வாங்குபவர்கள், விற்பனை செய்பவர்கள் அதிக நஷ்டம் அடைய நேரிடும்.

குறிப்பாக பங்குச் சந்தையின் வர்த்தக முறை, நெளிவு சுளிவுகள் தெரியாமல், சில பத்திரிக்கைகளில் வரும் பேராசை கொள்ளச் செய்யும் கட்டுரைகள், புரோக்கரிகளின் தேன் குழையும் அறிவுரைகளால் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் நட்டம் அடைய வேண்டியதுதான்.

புலியை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பூனையின் கதையாக தான் முடியும்.

இதற்காகத்தான் இந்திய முதலீட்டுச் சந்தையை பாதுகாக்க செபி சில ஆலோசனைகளை செவ்வாய்க்கிழமை அறிவித்தது. அதற்கு அடுத்த நாள் காலையில் பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய பத்தாவது நிமிடத்திலேயே மும்பை பங்குச் சந்தையில் 1,743 புள்ளிகள் சரிந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் 525 புள்ளிகள் சரிந்தது.

இதனால் இரண்டு பங்குச் சந்தைகளிலுமே ஒரு மணி நேரம் வர்த்தம் நிறுத்தப்பட்டது.

உடனே மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அந்நிய முதலீட்டு நிறுவனங்களை பார்டிசிபேட்டரி நோட் முறையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு தடை விதிக்கும் நோக்கம் இல்லை என்று அவசரமாக அறிவித்தார். இதன் பிறகே நிலைமை சீராக தொடங்கியது.

இந்த மிரட்டல் இனி தினசரி தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

கடந்த வாரத்தில் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பங்குச் சந்தையில் ஊக வணிகம் நடக்கின்றது என்று எச்சரித்தார். அத்துடன் சிறு முதலீட்டாளர்கள் நேரடியாக பங்குகளை வாங்காமல், பரஸ்பர நிதி மூலம் பங்குச் சந்தையில் பங்கு பெறும் படி அறிவுறுத்தினார்.

அதே சிதம்பரம் தான், நேற்று அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பாதிப்பு ஏற்படும் படி எதுவும் செய்ய மாட்டோம் என்று உறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்