இந்தியாவில் கடன் நிதி நெருக்கடி ஆபத்து!

Webdunia

புதன், 17 அக்டோபர் 2007 (17:42 IST)
இந்தியாவிலும் சப் பிரைம் நெருக்கடி என்று கூறப்படும் கடன் நிதி நெருக்கடி (Credit Crunch) ஏற்படும் ஆபத்து இருப்பதாக ரிசர்வ் வங்கியின் முன்னால் துணை கவர்னர் தாராபூர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் வீடு கட்டுவற்கும், வீட்டின் மீது அடமானம் கடன் வாங்கியவர்கள் கடன் திருப்பிச் செலுத்தவில்லை. இதனால் வீட்டு கடன் வங்கிகள், நிதி நிறுவனங்கள் நஷ்டமடைந்தன. இதன் விளைவாக வீட்டு கடன் வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு மறுகடன் கொடுத்த நிதி நிறுவனங்களும் பாதிக்கப்பட்டன.

இதன் விளைவாக அமெரிக்காவில் சமீபத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அமெரிக்க மத்திய வங்கி அரை விழுக்காடு வட்டியை குறைத்தது. அமெரிக்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருந்த நிறுவனங்கள், கடன் பத்திரங்களை விற்பனை செய்தன.

இந்த நெருக்கடியால் பல நாட்டு முதலீட்டு நிறுவனங்கள், அமெரிக்காவில் செய்திருந்த முதலீட்டை திரும்ப பெற்று இந்தியா போன்ற நாடுகளில் முதலீடு செய்து வருகின்றன. அமெரிக்க நாணயமான டாலரின் மதிப்பு குறைந்தது.

இவ்வாறு கடன் நிதி நெருக்கடி ஆபத்தால் ப்லவேறு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

இதே போல் இந்தியாவிலும் கடன் நிதி நெருக்கடி ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் எஸ். எஸ். தாராபூர் எச்சரித்துள்ளார்.

மும்பையில் இடர்பாடுகள் ( ரிஸ்க் ) குறித்த கருத்தரங்கில் தாராபூர் உரையாற்றும் போது கூறியதாவது.

தனிநபர் கடன், கடன் அட்டை, ரியல் எஸ்டேட் வீட்டு கடன் பங்குகள் வாங்க கடன் போன்ற கடன்கள் ஆபத்தில்லாதவை, இந்த கடன்கள் வசூலாகிவிடும் என்ற தவறான எண்ணம் உள்ளது. இதன் காரணமாக இந்த வகை கடன்கள் அளவிற்கு அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கடன்கள் பல வருடங்களாக திரும்ப வசூலாகதால் இப்போது வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இதன் பாதிப்பை உணரத் தொடங்கியுள்ளன.

பொருளாதார நிபுணர் எம்.ஜி. பிக்ட் மதிப்பீட்டின்படி வங்கிகள், நிதி நிறுவனங்களால் கடந்த ஒரு வருடத்தில் தனிநபர் கடன்கள் ரூ. 4,800 கோடியும், மற்ற வகை கடன் அட்டை போன்ற மற்ற வகை தனிநபர் கடன்கள் 2,000 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் நிதி நிறுவனங்களின் பேரேடில் உள்ள கணக்கு படி தனி நபர் கடன்கள் 35 ஆயிரம் கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 80 விழுக்காடு அதாவது 28 ஆயிரம் கோடி வரை திரும்பி வராத ஆபத்தான கடனாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடன் அட்டைகள் மூலம் வழங்கப்பட்ட கடனில் 16 ஆயிரம் கோடி பாக்கியுள்ளதாக மதிப்பிடப்பிடப்பட்டுள்ளது. இதில் 40 விழுக்காடு வாங்கிய கடனை முதல் முறை தவணைகளில் கட்டாமல் வட்டி அபராதம் போன்றவைகளைச் சேர்த்து மீண்டும் புதிய கடனாக மாற்றப்பட்டவை. இவையும் திரும்பி வர வாய்ப்பில்லாத ஆபத்தான கடன் வகைதான்.

இவ்வாறு வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் 41 ஆயிரம் கோடி வரை மீண்டும் வசூலாகும் வாய்ப்பு குறைவாக உள்ள நெருக்கடியான கடன் உள்ளது.

இத்தகைய கடனால் எந்த நேரமும் நெருக்கடி ஏற்படலாம் என்று தாராபூர் எச்சரித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்