கிராம்பு விலை அதிகரிக்கும்!

Webdunia

செவ்வாய், 16 அக்டோபர் 2007 (19:27 IST)
கிராம்பு விளையும் நாடுகளில் உற்பத்தி குறைந்த காரணத்தினால் இதன் விலஅதிகரிக்கும் என்று தெரிகிறது.

சர்வதேச சந்தையில் கிராம்பு விற்பனைக்கு வருவது குறைந்துள்ளது. கிராம்பு பயிரிடப்படும் பல நாடுகளில் இந்த வருடம் பருவநிலை பாதிப்பால் கிராம்பு விளைச்சல் குறைந்துள்ளது,

வழக்கமாக 4,000 டன் உற்பத்தி ஆகும் ஜான்ஜிபாரில் 800 டன் மட்டுமே உற்பத்தியாகும் என்று தெரிகிறது.

அதே போல் மடாகஸ்கரில் வழக்காமாக உற்பத்தியாகும் 12,000 டன்னுக்கு பதிலாக 3,000 டன் மட்டுமே உற்பத்தியாகும், கமாரஸ் நாட்டிலும் உற்பத்தி குறைவாக இருப்பதாக நறுமணப் பொருட்கள் வாரியத்தை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவுக்கு தேவையான கிராம்பில் பெரும் பகுதி இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இலங்கையிலும் சென்ற வருடத்தைவிட இந்வருடம்குறைவாகவே கிராம்பு உற்பத்தி ஆகும் என மதிப்பிடப்படுள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள தாராள வர்த்தக உடன்படிக்கையின் படி கிராம்பு இறக்குமதி செய்யப்படுகிறது. இலங்கையில் இருந்து பெரும்பாலும் ஜனவரி மாத வாக்கில் கிராம்பு இறக்குமதி செய்யப்படும். இந்த வருடம் உற்பத்தி குறைவாக இருப்பதால் கிராம்பு விலை 1 டன் 5 ஆயிரம் டாலர் என்று இலங்கை வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவிற்கு வருடத்திற்கு 12 ஆயிரம் டன் கிராம்பு தேவைப்படுகிறது. இதில் உள்நாட்டில் 2,000 டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. சுமார் 10 ஆயிரம் டன் இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் கிராம்பு கேரள மாநிலத்தில் கோட்டயம், பதனமாதிட்டா, எர்ணாகுளம், திருவனந்தபுரம் மாவட்டங்களிலும், தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம், செங்கோட்டை ஆகிய ஊர்களில் பயிர் செய்யப்படுகிறது.

கடந்த நான்கு வருடங்ககளுக்கு முன்பு கிராம்பின் விலை சரிந்தது. இதனால் கிராம்பு பயிர் செய்யும் விவசாயிகள் நஷ்டமடைந்து, செடியை பிடிங்கி விட்டனர் புதிய செடியை நடவு செய்துள்ளனர். இதிலிருந்து கிராம்பு உற்பத்தியாவதற்கு இரண்டு முதல் மூன்று வருடங்கள் வரை ஆகும். இந்த வருடம் உள்நாட்டில் இருந்து கிராம்பு விற்பனைக்கு குறைந்த அளவே கிடைக்கும். இந்தியாவின் தேவையை இறக்குமதி மூலமாகவே ஈடுகட்ட வேண்டியுள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

தற்போது கிராம்பு 1 கிலோ ரூ. 240 முதல் ரூ. 250 வரை விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த வரும் மாதங்களில் தீபாவளி, கிறிஸ்துமஸ். புதுவருடம், பொ ங்கல் பண்டிகை மற்றும் திருமண நிகழ்ச்சிகள் அதிகளவில் நடைபெறும். இந்த பண்டிகையின் காரணமாக கிராம்பு தேவை அதிகரிக்கும். அடுத்து வரும் மாதங்களில் கிராம்பு விலை 1 கிலோ ரூ 275 முதல் 300 வரை உயர வாய்ப்புள்ளது என தெரிகிறது.

கிராம்பு அதிகளவு உற்பத்தியாகும் நாடுகளில் ஒன்றான தாய்லாந்தில் இந்த ஆண்டு உற்பத்தி சராசரியாக இருக்கும். இங்கு வருடத்திற்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் டன் வரை உற்பத்தியாகும். ஆனால் இவற்றில் 80 விழுக்காடு சிகரட் தயாரிக்கும் நிறுவனங்களே கொள்முதல் செய்கின்றன. 20 விழுக்காடு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. தாய்லாந்தில் இந்த பருவத்தில் கிராம்பு பயிரிடப்படும் பகுதிகளில் மழை பெய்துள்ளதால், விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் புதிய கிராம்பு விற்பனைக்கு வரும். இந்த வருடம் 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் டன் மட்டுமே உற்பத்தியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற காரணங்களினால் சர்வதேச சந்தையில் கிராம்பு விலை உயரும் என்று இறக்குமதியாளர்களும், உள்நாட்டு வர்த்தகர்களும் கூறுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்