விமான நிலையங்களின் சரக்கு (cargo complexes) முனையங்களில், கட்டணமின்றி சரக்குகளை வைக்கும் காலத்தை குறைத்து, ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு மத்திய அரசு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.
விமானங்களில் வெளிநாடுகளுக்கு சரக்குகளை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்களும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும இறக்குமதியாளர்களும் குறிப்பிட்ட நாட்கள் வரை சரக்கு முனையத்தில் இலவசமாக வைத்திருக்கலாம்.
ஏற்றுமதியாளர்கள் சரக்கு விமானங்களில் அனுப்புவதற்கு முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும். உற்பத்தி செய்யப்படும் இடத்தில் இருந்து விமான நிலையத்திற்கு சரக்குகளை லாரிகள் மூலமாக கொண்டு வர வேண்டும்.
சாலையில் போக்குவரத்து நெரிசல், சாலை விபத்து, அரசியல் கட்சிகளின் பேரணியால் பாதையை திருப்பி விடுதல், நகரங்களில் லாரிகளை இயக்க நேரக் கட்டுப்பாடு, மற்றும் எதிர்பாராத சம்பவங்களால் தாமதமாகுதல் போன்ற காரணங்களினால் தாமதமாவதை தவிர்க்க சில நாட்கள் முன்பே சரக்கை கொண்டு வந்து சரக்கு முனையத்தில் வைக்கின்றனர்.
இது மட்டுமின்றி, சுங்கத் துறையினர் பரிசோதனை செய்வதற்கு ஏற்படும் கால தாமதம் போன்ற காரணங்களினால் ஏற்றுமதியாளர்கள், சரக்குகளை ஐந்து நாட்களுக்கு முன்பே சரக்கு முனையத்திற்கு கொண்டு வருகின்றனர். இது போன்ற காரணங்களினால் இறக்குமதியாளர்களும் சரக்கு வந்து சேர்ந்த பின், சரக்கு முனையத்தில் இருந்து வெளியே கொண்டு செல்வதற்கும் நான்கு, ஐந்து நாட்கள் ஆகின்றது.
இது வரை ஏற்றுமதியாளர்கள் இரண்டு நாட்களும், இறக்குமதியாளர்கள் ஐந்து நாட்களுக்கும் சரக்கு முனையத்தில் தங்கள் சரக்குகளை இலவசமாக வைத்துக் கொள்ளலாம்.
இதற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. சரக்கு முனைய கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். அதற்கு மேல் சரக்குகளை வைத்திருந்தால், அபராதக் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விதி இருந்தது.
இதை அக்டோபர் 1-ம் தேதி முதல் இலவசமாக வைக்கும் காலத்தை இறக்குமதியாளர்களுக்கு ஐந்து நாட்களில் இருந்து மூன்று நாட்களாகவும், ஏற்றுமதியாளர்களுக்கு இரண்டு நாட்களில் இருந்து ஒரு நாளாகவும் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சரக்கு முனையத்தில் ஏற்படும் நெருக்கடியை குறைக்கவும், சர்வதேச தரத்திற்கு சர்வதேச முனையத்தை உயர்த்தவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இத்துடன் இந்திய விமான நிலையங்களின் ஆணையம், சரக்கு முனைய கட்டணத்தை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
அரசின் இந்த முடிவிற்கு ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இது பற்றி ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்த சங்கத்தின் தலைவர் ஜி.எஸ். மதன், இந்திய விமானநிலையங்களின் ஆணையத்தின் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இப்பொழுது உள்ள சூழ்நிலையில், இலவச நேரத்தை குறைக்கும் முடிவை அமல்படுத்தாமல் ஒத்திவைக்க வேண்டும். இந்த முடிவை அமல்படுத்துவதற்கு முன்பு, இதில் தொடர்புடைய அனைவரின் சம்மதத்தையும் பெற வேண்டும். இதை அமல்படுத்தும் வகையில், தேவையான எல்லா உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.
விமான நிலையங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதும், சரக்கு முனைய நெருக்கடியை குறைக்கும் அரசின் முடிவு பாராட்டத்தக்கதே. அதே நேரத்தில் விமான நிலையங்களின் சரக்கு முனையத்தில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், சரக்குகள் கையாளும் வசதி, மற்றம் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும், சிக்கலான பரிசோதனை அனுமதி, நடைமுறைகள் போன்ற பிரச்சனைகளால், சரக்குகளை வைக்கும் நேரத்தை குறைப்பது சாத்தியப்படாது.
இந்த முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன் ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்களின் கருத்தை கேட்டு, கவனத்தில் எடுத்துக் கொள்ளாதது வருந்தத்தக்கது. குறிப்பாக அதிகளவு பாதிக்கப்படும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களின் கருத்தை கேட்காதது வருந்தத்தக்கது என்று ஜி.எஸ்.மதன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்ததால் தங்களுடைய ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று த.தொ.மென்பொருள் நிறுவனங்களிலிருந்து ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள்வரை குமுறிக்கொண்டிருக்கையில், சரக்கு முனைய கட்டணமற்ற காலத்தை குறைக்கும் மத்திய அரசின் முடிவும், சரக்கு முனைய கட்டணத்தை உயர்த்துவது என்கின்ற விமான நிலையங்கள் ஆணையத்தின் முடிவும் ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த வர்த்தகத்தின் மீது மேலும் சுமையேற்றியுள்ளது.