இயற்கை உரத்தால் விவசாயிகளின் வருவாய் உயர்வு!

Webdunia

வியாழன், 20 செப்டம்பர் 2007 (19:07 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜூன்ஜூனு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆந்திரா, மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் போல் பாதிக்கப்படவில்லை. கடன் தொல்லையால் தற்கொலையும் செய்து கொள்ளவில்லை.

webdunia photoFILE
இதற்கு காரணம் என்ன? ராஜஸ்தான் விவசாயிகள் இரசாயன உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தாததே. இவர்கள் இயற்கை உரங்களை பயன்படுத்தியதால் உரம், பூச்சி கொல்லி மருந்துக்கான செலவு குறைந்தது, வருவாயும் அதிகரித்தது.

ராஜஸ்தான் விவசாயிகள் இராசயன உரத்திற்கு பதிலாக, மாட்டுச் சாணம், இலை தழைகளை மக்கச் செய்து தயாரிக்கப்பட்ட உரம், மண்புழு உரம் ஆகியவற்றை பயன்படுத்தினார்கள்.

இந்தியாவில் இயற்கை உரம், வேப்பம் புண்ணாக்கு போன்ற களைக் கொல்லிகளை பயன்படுத்துவது புதிதல்ல. சமீப காலம் வரை விவசாயிகள் தொழு உரம், மண்புழு உரம் போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தி வந்தனர். பசுமை புரட்சி காலத்தில் உற்பத்தியை பெருக்குவதற்கு இராசயன உரம் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய வீரிய விதை, குறுகிய கால விதைகள் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன.

இதனால் நிலத்தின் இயற்கையான மணிச் சத்து, சாம்பல் சத்து போன்றவை அழிந்து விட்டன. புதிய ரக பூச்சிகளும் உற்பத்தியாயின. பூச்சிகளை அழிக்க தெளிக்கப்பட்ட பூச்சி கொல்லி மருந்துகளால் நிலம், நீர் நிலைகளின் தன்மை மாசடைந்தது. அத்துடன் பூச்சிகளை உணவாக கொண்ட தவளை, பல்லி போன்ற உயிரினங்களும் அழிந்து விட்டன.

webdunia photoFILE
இராசயன உரம், பூச்சி கொல்லி மருந்துகளின் பாதிப்பை உலகம் முழுவதிலும் மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். இதனால் முன்பிருந்த மாதிரியே இயற்கை உரங்களை பயன்படுத்தும் போக்கு துவங்கியுள்ளது. அத்துடன் இரசாயனங்கள் பயன்படுத்தாமல் உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அதிக விலை கிடைக்கின்றது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி ராஜஸ்தான் மாநில விவசாயிகள் இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்வதுடன், அதிக இலாபமும் பெருகின்றனர். ஜமல்புரியாவில் இயற்கை விவசாயம் செய்துவரும் முரளி பிரசாத் சானி, தனது அனுபவத்தை கூறுகையில், தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை உரம் பயன்படுத்த தொடங்கியவுடன், தனது வாழ்க்கையே மாறி விட்டது என்று கூறுகின்றார்.

முன்பு நான் இராசயண உரம், பூச்சி கொல்லி மருந்து, யூரியா பயன்படுத்தியதால் எனது நிலத்தின் தன்மை இறுகிப் போய்விட்டது. இதனால் நிலத்தில் நீர் பிடிப்பு தன்மை பெருமளவு சிதைந்து விட்டது.
இதனால் உற்பத்தி குறைந்துடன், விளை பொருட்களின் தரமும் குறைந்து விட்டது என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், முன்பு விவசாயத்திற்கு அதிகம் செலவழிக்க வேண்டியதிருந்தது. நாங்கள் தற்போது விலை உயர்ந்த இரசாயன உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளை வாங்குவதில்லை. அதற்கு பதிலாக இலை, தழைகள், மாட்டுச் சாணம் கலந்து மக்க வைத்து, மண்புழு உதவியுடன் உரம் தயாரிக்கின்றோம். இந்த உரத்தை பயன்படுத்துவதால் இப்போது நிலத்தின் நீர் பிடிப்பு தன்மை அதிகரித்துள்ளது. உற்பத்தியும் அதிகரித்துள்ளது. தரமான பொருள் உற்பத்தி செய்யப்படுவதால் அதிக விலையும் கிடைக்கின்றது. எங்களின் வருவாய் ஒனறரை மடங்கு உயர்ந்துள்ளது என்று கூறினார்.

இவரும், இவரைப் போன்ற இயற்கை உரத்தை பயன்படுத்தி காய்கறி, கோதுமை, தாணியங்களை பயிரிடும் விவசாயிகள் உள்ளூர் சந்தையிலும், டில்லி சந்தையிலும் விற்பனை செய்கின்றனர்.