திருச்சி: தமிழக வேளாண் துறை நெல் மகசூலை அதிகரிக்க முனைப்புடன் செம்மை சாகுபடி திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த முறையில் ஹெக்டேருக்கு சுமார் 13 டன் மகசூல் கிடைத்துள்ளது.
திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகேயுள்ள ஆர். முத்தாழ்வார்பட்டி பகுதி பாப்பாப்பட்டியில் செம்மை நெல் சாகுபடி திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சம்பா பயிரில் ஹெக்டேருக்கு 12.7 டன் உற்பத்தியாகி உள்ளது.
இதே போல் அதே பகுதியைச் சேர்ந்த எம். கருங்கண்ணன் என்ற விவசாயி, நடப்பு சம்பா பருவத்தில் செம்மை நெல் சாகுபடி திட்டத்தின் மூலம் அம்பை 19 என்ற நெல் விதை ரகத்தைப் பயன்படுத்தி சாகுபடி செய்தார்.
இவரது வயலில் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ந. பொன்னுசாமி முன்னிலையில் அண்மையில் அறுவடை தின விழா நடைபெற்றது.
இதில், ஹெக்டேருக்கு 12.7 டன் மகசூல் பெற்று சாதனை எட்டப்பட்டுள்ளது.
இதுபற்றி வேளாண் இணை இயக்குநர் கூறும் போது, இந்தச் சாகுபடி முறையில் ஒரு குத்துக்கு 45 முதல் 65 தூர்கள் வரை இருந்தன. இதில், 42 முதல் 52 கதிர்கள் வரை இருந்தன.
ஒரு கதிரில் 260 முதல் 310 மணிகள் வரை இருந்தது என்று தெரிவித்தார். இந்த விழாவில் வேளாண் துணை இயக்குநர்கள் வெ. இராம்குமார் (மாநிலத் திட்டங்கள்), சு. சிவராஜ் (மத்திய திட்டங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.