சிம்லா: மூலிகை மருந்துகளை தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு, நிதி உதவி செய்வதென ஹிமாசல பிரதேச தொழில் மேம்பாட்டுக் கழகம் முடிவு செய்துள்ளது.
ஹிமாசல பிரதேச தொழில் மேம்பாட்டு கழக இயக்ககுநர்களின் கூட்டம் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இதற்கு மாநில முதலமைச்சர் பிரேம் குமார் துமால் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களிடம் துமால் பேசுகையில், ஹிமாசல பிரதேசத்தில், இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அமைக்கும், ஏற்றுமதி ரீதியான மூலிகை மருந்து, வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் நிதி உதவி செய்யும்.
இங்கு அமைக்கப்பட உள்ள ஹிமாசல் பைடோசெம் தொழிற்சாலைக்கு ரூ.2.25 கோடி கடன் வழங்கப்படும். இந்த தொழிற்சாலையில் மூலிகை மருந்துகளான அஸிசின், எல்-டோபா, ஹைபர்சின், போடோபிலோடாக்ஸின் போன்ற மூலிகை மருந்துகள் தயாரிக்கப்படும்.
இந்த மருந்துகள் தயாரிப்பதற்கான மூலிகைகள் மாநிலத்தில் கிடைக்கின்றன. இந்த மூலிகைகளை வளர்க்கும் விவசாயிகளிடம் இருந்து, அவர்களின் வீட்டிற்கு சென்று மூலிகை வாங்கப்படும்.
இதை பசுமை குடில்களில் வளர்க்க, இளம் தொழில் முனைவோர்கள், விவசாயிகளுக்கு விளக்குவார்கள் என்று தெரிவித்தார்.