கரும்புக்கு நியாயமான விலை நிர்ணயம்: வரதராஜன் வலியுறுத்தல்
சனி, 27 டிசம்பர் 2008 (11:45 IST)
கரும்புக்கு நியாயமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் என்.வரதராஜன், தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாய இடுபொருட்கள் தொடர்ந்து விலை உயர்ந்து வருவதாலும், மறுபக்கம் விவசாய விளைபொருட்களுக்கு போதுமான விலை வழங்காததாலும், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.1,550 விலை நிர்ணயம் செய்ய சிபாரிசு செய்துள்ளது. இதில் ரூ.1,250ஐ ஆலை நிர்வாகமும் ரூ.300ஐ மத்திய அரசும் வழங்க வற்புறுத்தியுள்ளது.
ஆனால், கடந்த ஆண்டு நிர்ணயித்த ரூ.811.80 விலையையே இந்த ஆண்டும் மத்திய அரசு விலையாக தீர்மானித்துள்ளது. எனவே, மத்திய அரசின் அறிவிப்பு கரும்பு விவசாயிகளை காப்பாற்ற உதவாது. மத்திய அரசின் விலை ஒருபக்கம் இருந்தாலும், மகாராஷ்டிரா, அரியானா, பஞ்சாப், புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்கள், கரும்புக்கு கூடுதல் விலை நிர்ணயித்துள்ளன.
ஆனால், தமிழக அரசு டன்னுக்கு ரூ.1,050 மட்டும் நிர்ணயித்துள்ளது. இது, விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் டன்னுக்கு ரூ.1,270 வரை கொடுப்பதாக ஆலை நிர்வாகிகள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
எனவே, தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு விலை நிர்ணயிக்கவும், மாநில அரசின் சிபாரிசு விலையை உயர்த்தியும் வழங்க வேண்டும் என்று வரதராஜன் தெரிவித்துள்ளார்.