ராசிபுரம்: சுய உதவி குழுக்களுக்கு உயிரியல் இடுபொருள் உற்பத்தி மையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது என்று வேளாண் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து வேளாண் உதவி இயக்குநர் த.லோகநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ராசிபுரம் எலச்சிபாளையம் வட்டாரத்தில் உயிரியல் இடுபொருள் உற்பத்தி மையம் அமைக்க, சுய உதவிக் குழுவுக்கு ரூ.1.25 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது. இதனை அமைக்க ஆர்வமுள்ள சுய உதவிக் குழுவினர் விண்ணப்பிக்கலாம்.
இந்த மையம் அமைக்க ரூ. இரண்டரை லட்சம் செலவாகும். இதனை அமைக்கும் சுய உதவிக் குழுவினருக்கு வங்கி கடனுக்கு பரிந்துரைப்பதுடன், 50 விழுக்காடு மானியமும் வழங்கப்படும்.
இதில் வேம்பு மருந்துகள், வேப்பம் புண்ணாக்கு, உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா உரங்களையும், உயிரியல் மருந்துகளான டிரைகோடெர்மா விரிடி, சூடோமோனாஸ், என்பிவைரஸ் போன்றவற்றையும் உற்பத்தி செய்து, விற்பனை செய்யலாம்.
இதற்காக தேர்வு செய்யப்படும் சுய உதவி குழுவைச் சேர்ந்த பேருக்கு, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிற்சியளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.