அம் ஆத்மி பீம யோஜனா- காப்புறுதி திட்டம் அறிமுகம்

திங்கள், 22 டிசம்பர் 2008 (18:24 IST)
புது தில்லி : மத்திய அரசு “அம் ஆத்மி பீம யோஜனா” என்ற புதிய காப்புறுதி திட்டத்தை, இந்திய ஆயுள் காப்பீடு கழகத்தின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது என்று அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் தெரிவித்தார்.

இந்த காப்பீடு திட்டத்தின் மூலம் ஊரகப் பகுதிகளில் சொந்த நிலமற்ற குடும்பத் தலைவருக்கோ அல்லது அந்த வீட்டின் வருமானம் ஈட்டும் உறுப்பினருக்கோ இறப்பு மற்றும் ஊனத்திற்கு காப்புறுதி செய்யப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் இயற்கை மரணத்திற்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். விபத்தினால் இறந்தாலோ அல்லது முழுமையான நிரந்தர ஊனம் ஏற்பட்டாலோ ரூ.75 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும். இதே போல விபத்தினால் ஏற்படும் ஓரளவு ஊனத்திற்கு ரூ.37,500 வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுபவரின் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு, குழந்தை ஒன்றுக்கு காலாண்டுக்கு ரூ.300 வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

இந்த காப்பீடு திட்டத்திற்கு பிரிமியத் தொகை ரூ.200. இதில் மத்திய அரசு உருவாக்கிய நிதியின் கீழ் 50 விழுக்காடு மானியமாகவும், 50 விழுக்காடு மாநில அரசும் தனது பங்காக வழங்கும். இந்த திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு எந்தவித நிதியும் வழங்கப்படவில்லை என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இன்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்