குன்னூர்: உலக அளவில் நீலகிரி தேயிலைக்கு அங்கிகாரம் கிடைக்கும் வகையில், நீலகிரி ஆர்தோடக்ஸ் தேயிலை என்ற தர சான்று வழங்கப்படுகிறது.
இது குறித்து தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் ஆர்.டி.நசீம் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஆர்தோடக்ஸ் ரக தேயிலையில் கலப்படம் செய்ய முடியாது.
உலக வர்த்தகத்தில் நீலகிரி தேயிலைக்கு நிரந்தர இடம் கிடைக்கும் செய்யும் முயற்சியில் “நீலகிரி ஆர்தோடக்ஸ் தேயிலை” என்ற சான்று வழங்கும் நிகழ்ச்சி வரும் ஞாயிறன்று குன்னூரில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷ், நீலகிரி ஆர்தோடக்ஸ் தேயிலை முத்திரையை வழங்குகின்றார்.
நீலகிரி தேயிலைக்கு உலகளாவிய அந்தஸ்தை பெற்றுத்தரும் திட்டத்தின் அடிப்படையில் 41 ஆர்தோடக்ஸ் தேயிலை தொழிற்சாலைகளை தேர்வு செய்யப்படும். இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஆர்தோடக்ஸ் வகை தேயிலையை, நீலகிரி ஆர்தோடக்ஸ் தேயிலை என்ற சர்வதேச முத்திரை பதிக்கப்படும்.
இதை தேயிலை வாரியம் உலக அளவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த முயற்சியின் மூலம் உலக அளவிலும், உள்நாட்டு வர்த்தகத்திலும் நீலகிரி ஆர்தோடக்ஸ் வகை தேயிலைகளுக்கு அதிக அளவு வரவேற்பு இருக்கும்.
இதன் மூலம் வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகள் பல்வேறு வகையில் பலனடைவர். மேலும் தென் இந்தியாவில் தற்போது 100 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்போது குளிர்பானங்களின் விற்பனை குறைந்து, தேயிலை நுகர்வோர்களின் எண்ணிக்கை 4 விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஆர்தோடக்ஸ் தேயிலைகள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவதாக ஆய்வில் கூறிய கருத்துக்குப்பின், இதற்கு வரவேற்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்று கூறினார்.