வேளாண் காப்பீடு டிச.15 கடைசி நாள்

சனி, 13 டிசம்பர் 2008 (11:46 IST)
கோவை: மத்திய அரசின் வேளாண் காப்பீடு நிறுவனத்தில் நெல் பயிர்களை டிசம்பர் 15 ஆம் தேதி வரை காப்பீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் சு.சூரியநாராயணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், மத்திய அரசு நிறுவனமான வேளாண் காப்பீடு நிறுவனம் நாடு முழுவதும் வேளாண் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் சம்பா நெல் பயிருக்கு காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக வங்கி, கூட்டுறவு வங்கி அல்லது கிராமிய வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

ஏக்கருக்கு சாதாரண மதிப்பாக ரூ.10,312 காப்பீடு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் தவணைத் தொகையாக ரூ.93, பிற விவசாயிகள் ரூ.103 செலுத்த வேண்டும்.

கூடுதல் மதிப்பாக ஏக்கருக்கு ரூ.9,024 காப்பீடு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் மாதத் தவணைத் தொகையாக ரூ.142, பிற விவசாயிகள் ரூ.158 செலுத்த வேண்டும்.

இதுதவிர ஏக்கருக்கு மொத்த மதிப்பாக ரூ.19,336 க்கு காப்பீடு செய்யலாம். இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் மாதத் தவணையாக ரூ.235, பிற விவசாயிகள் ரூ.261 செலுத்தலாம்.

காப்பீடு செய்து கொள்ள, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், கம்ப்யூட்டர் சிட்டா அடங்கல், கிராம நிர்வாக அலுவலர் சான்று ஆகியவற்றை சேமிப்பு கணக்கு வைத்துள்ள வங்கியில் சமர்ப்பித்து இத்திட்டத்தில் சேரலாம் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்