அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு அணைகள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளது. இதையடுத்து, பாபநாசம் அணையின் உபரி நீர் வழிந்தோடி வழியாக 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு அணைகள் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை பெய்த போது. இந்த அணைகள் நிரம்பவில்லை. தற்போது வடகிழக்கு பருவ மழையால், கடனாநதி, குண்டாறு, கருப்பாநதி உள்ளிட்ட குறைந்த அளவிலான நீர்மட்டம் கொண்ட அணைகள் நிரம்பின.
பாபநாசம், சேர்வலாறு அணைகள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நிரம்பின. இந்த அணைகள் இதற்கு முன்பு 2006 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் நிரம்பின. அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது நிரம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அணைகள் நிரம்பியதையடுத்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. பின்னர், பாபநாசம் அணையின் உபரி நீர் வழிந்தோடி வழியாக, திறந்து விடப்பட்டது.
முதலில் ஒரு வழிந்தோடி வழியாக விநாடிக்கு 1500 கனஅடி திறக்கப்பட்டது. பின்னர், நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து நான்கு வழிந்தோடிகள் வழியாக மொத்தம் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், பாபநாசம் அகஸ்தியர் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.