திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு கிணறுகள் மூலம் மழைநீரை சேமிக்க ரூ. 1 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இரா. வாசுகி தெரிவித்துள்ளார்.
திறந்த வெளிக்கிணறுகளின் மூலம் விவசாயிகளின் பாசன கிணறுகளில் நிலத்தடி நீரை செயற்கை முறையில் செறிவூட்டுவதற்காக மத்திய அரசின் திட்டம், தமிழ்நாட்டில் 232 அதிநுகர்வு அபாயகரமான மற்றும் மித அபாயகரமான நிலையில் உள்ள ஒன்றியங்களில் செயலாக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தின்படி கட்டுமான பணிக்காக ஒரு பாசனக் கிணறுக்கு ரூ.4 ஆயிரம் செலவாகும். இப் பணியினை செயல்படுத்தும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு முழு மானியமாக ரூ.4 ஆயிரமும், இதர விவசாயிகளுக்கு 50 விழுக்காடு மானியமாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும்.
ஒன்றுக்கு மேற்பட்ட கிணறு வைத்துள்ள விவசாயிகளும் இதில் பயன்பெறலாம்.
இதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1 கோடியே 70 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு மானியம், நேரடி யாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
தற்போது 1,842 சிறு விவசாயிகளும், 1,889 குறு விவசாயிகளும், 1,057 இதர விவசாயிகளும் பயன்பெறுவார்கள்.
இப் பணியினை துரிதப்படுத்தும் விதமாக ஊராட்சிமன்றத் தலைவர் தலைமையில் அனைத்துத் துறை மற்றும் உள்ளூரில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், கல்லூரி மாணவர்கள் கொண்ட செயல்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டு உதவிகளை செய்ய விழிப்புணர்வு மற்றும் தகவல் மையம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இரா. வாசுகி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.