மதுரை: இந்த கரும்பு அரைவைப் பருவத்தில் 3.50 லட்சம் டன் கரும்பு அரைவை செய்யத் திட்டமிட்டுள்ளதாக, அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தனி அலுவலர் கு.கலைச்செல்வன் தெரிவித்தார்.
இந்த சர்க்கரை ஆலையில் 2008-09 ஆம் ஆண்டுக்கான கரும்பு அரைவை அண்மையில் துவங்கப்பட்டது. இதை சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.மூர்த்தி துவக்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆலையின் தனி அலுவலர் பேசும் போது, நடப்பு அரைவைப் பருவத்தில் கரும்பு ஆலைக்கு அனுப்பப்பட்ட 7 தினங்களுக்குள் ஒரே தவணையில் பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த சர்க்கரை ஆலையில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத கரும்புகள் அனைத்தும் அரைவை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக விழிப்புணர்வுக் குழுவை ஏற்படுத்தி, கரும்பு கட்டுப்பாடு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மேலும், வேளாண் துறை மூலம் ஆலை வளாகத்தில் ரூ. 7 லட்சத்தில் தானியங்கி தட்பவெப்ப நிலை அறியும் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கரும்பு விவசாயிகள் அகல பார் நடவு செய்து சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 11,400 மானியமாகப் பெறலாம். தவிர, கடன் வசதிகளும் பெறலாம். இதுதொடர்பாக விவசாயிகள் ஆலையின் களப் பணியாளர்களை அணுகலாம் என்று கலைச்செல்வன் தெரிவித்தார்.