மதுரை : வைரஸ் நோயை எதிர்க்கக்கூடிய வகையில், மரபணு மாற்றப்பட பப்பாளி ரக விதையை உருவாக்கும் ஆராய்ச்சி தீவிரமாக நடைபெற்று வருவதாக, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.ராமசாமி தெரிவித்தார்.
மதுரையில் நேற்று பப்பாளி குறித்த 2 வது சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் பங்கேற்ற துணைவேந்தர் ராமசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், பப்பாளி சாகுபடி செய்யும் நாடுகளில் பிரேசில், மெக்ஸிகோ, நைஜீரியாவுக்கு அடுத்தபடியாக இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
தற்போது பப்பாளியில் ரிங்ஸ்பாட் வைரஸ் நோய்த் தாக்குதல் அதிகளவில் காணப்படுகிறது. இதனால், உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், விவசாயிகள் நஷ்டமடைய நேரிடுகிறது.
இதைத் தடுக்கும் வகையில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆராய்ச்சி நடந்து வருகிறது. ஹவாய் தீவில் மரபணு மாற்ற பப்பாளி ரகம் உருவாக்கப்பட்டது. அது வைரஸ் தாக்குதலை சமாளித்து நல்ல விளைச்சலை அளித்து வருகிறது.
அதேபோல் இன்னும் 3 ஆண்டுகளில் தமிழகத்திலும் மரபணு மாற்ற பப்பாளி ரகம் கொண்டு வரப்படும். இதைப் பயன்படுத்தி அதிக விளைச்சலைப் பெற முடியும். இதற்கான பணி மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை உதவியுடன் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு வழங்கிய ரூ.7.50 கோடியில், பப்பாளி ஆராய்ச்சிக்காக ரூ.1 கோடி வரையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது பப்பாளி ரகம் வணிக ரீதியில் தமிழகத்தில் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
பப்பாளியில் பல்வேறு ஊட்டச் சத்துகள் நிறைந்திருப்பதால், இதுபற்றிய விழிப்புணர்வை தன்னார்வ நிறுவனங்கள், வேளாண் துறையினர், தோட்டக் கலைத் துறையினர் மூலம் பொதுமக்களிடம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று தக்காளியிலும் வீரிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை நோய்த் தாக்குலை சமாளிக்கும். அழுகுவதிலிருந்து நீண்டநாள் தாக்குப் பிடிக்கும்.
தனியார் நிறுவனங்கள் மூலம் விற்கப்படும் விதைகளில், சில நிறுவனங்களின் விதைகள் தரமில்லாமல் போவதால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய நஷ்ட ஈட்டைப் பெற முடியும்.
வரும் 2009 ஆம் ஆண்டில் 7 புதிய விதை ரகங்கள் வேளாண் பல்கலை. மூலம் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. நெல், காய்கறிகள், சிறுதானியங்கள், பழங்கள் ஆகியவற்றில் இந்த விதை ரகங்கள் வெளியிடப்படும். இதற்கான அங்கீகார கமிட்டி மூலம் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.