மக்களவை முன் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சனி, 6 டிசம்பர் 2008 (10:15 IST)
ஈரோடு: மக்களவை முன்பு கரும்பு விவசாயிகள் 10 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

கரும்பு விவசாயிகள் பிரச்னை தீரும் வரை கரும்பு வெட்டுவதில்லை என்றும் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்பு குழு முடிவு செய்துள்ளது.

விவசாயிகள் இதில் உறுதியாக இருக்க வேண்டுமென அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பி.காசியண்ணன் விடுத்துள்ள அறிக்கையில், கரும்பு டன்னுக்கு ரூ.2 ஆயிரம் வழங்ங்குவது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள கரும்பு விவசாயிகள், "சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வெட்டுவதில்லை' என்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கெனவே ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டங்களும் நடத்தப்பட்டு, வேளாண்துறை அமைச்சரிடம் மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், கடந்த 1-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அதில் கலந்து கொண்ட விவசாயிகள், ஆலை நிர்வாகம் அறிவித்த ரூ.25 விலை உயர்வு மற்றும் சலுகைகளை ஏற்காமல், கூட்டத்தைவிட்டு வெளிநடப்பு செய்துள்ளனர்.

சக்தி சர்க்கரை ஆலை மட்டுமல்லாது, பண்ணாரி, ஈஐடி பாரி உள்ளிட்ட சர்க்கரை ஆலைகளுக்கும் கரும்பை வெட்டுவதில்லை என்ற முடிவு தொடரும்.

வருகின்ற 10 ஆம் தேதி டில்லியில் மக்களவை முன், தேசிய அளவிலான கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆலைகளுக்கும் போராட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் விழுப்புரத்தில் சனிக்கிழமை விவசாய சங்கத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில் பல்வேறு போராட்டங்கள் குறித்து முடிவு செய்யப்படும்.

எனவே ஆலை நிர்வாகங்களின் சூழ்ச்சிகள், பிரித்தாளும் நடவடிக்கைகளுக்கு கரும்பு விவசாயிகள் ஆளாகிவிடாமல், கூடுதல் விலை கிடைக்கும்வரை ஆலைகளுக்கு கரும்பு வெட்டுவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.

டில்லி போராட்டத்துக்குப் பின்னர் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கூடி, விவசாயிகளின் கருத்தை அறிந்து, அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்