ஈரோடு மாவட்டத்தில் நெற்பயிர்களுக்கு வினோத நோய் தாக்குதல்!
செவ்வாய், 25 நவம்பர் 2008 (11:16 IST)
ஈரோடு மாவட்டத்தில் கடும் மூடுபனி, கடும் வெயில் என தட்பவெப்ப நிலை மாறி, மாறி வருவதால் நெற்பயிர்களுக்கு பழுப்பு நிறமான வினோத நோய் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பெரும்பாலான நாட்களில் கடும் மூடுபனி காணப்படுகிறது. இதனையடுத்து பகல் நேரத்தில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. சில நாட்கள் கடுங்குளிர் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இரவு மட்டும் சாரல் மழை பெய்து வருகிறது.
தற்போது கீழ்பவானி பாசனப்பகுதியில் சுமார் இரண்டு லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நெற்பயிர் நடவு செய்துள்ளனர். இந்த பயிர்கள் தற்போது நடுத்தரமான அளவு வளர்ந்து காணப்படுகிறது.
கடந்த ஒரு மாதமாக ஏற்படும் தட்பவெப்பத்தின் எதிரொலியாக நெற்பயிர்களுக்கு புதியதாக பயிர்கள் பழுத்து மஞ்சள் நிறத்தில் காணப்படும் வினோத நோய் ஏற்பட்டுள்ளது.
இந்த நோய்காக விவசாயிகள் புதிய பூச்சிகொல்லி மருந்துகள் கூடுதலாக பயன்படுத்தி வருகின்றனர்.