கோவை: நீர்நிலைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தால், தானிய உற்பத்தி அதிகரிக்கும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.ராமசாமி கூறினார்.
தமிழ்நாடு பொருளாதார நிபுணர்கள் சங்கம் சார்பில் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் சனிக்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது
இதில் துணைவேந்தர் சி.ராமசாமி பேசும் போது, உள்நாடு மட்டுமன்றி வெளிநாடுகளிலும் சுற்றுச்சூழல் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. 11 ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் 300 காற்று ஆய்வு மையங்கள், 850 நீர் தர ஆய்வு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை, மதுரை உள்பட பல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால், வருங்காலத்தில் 25 விழுக்காடு விளைச்சல் குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
விவசாய நிலத்தின் பரப்பை அதிகரிப்பதைவிட, தரமான தொழில்நுட்பங்களின் மூலம் தானிய உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கலாம். குறைந்த நீர் செலவாகும் சொட்டுநீர்ப்பாசனம் அமைக்க அரசு அதிக மானியம் வழங்கி வருகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்த முன்வர வேண்டும். சொட்டுநீர்ப் பாசனத்தால் 30 முதல் 70 விழுக்காடு வரை நீர் சேமிக்கலாம். இத்துடன் தானிய உற்பத்தியும் அதிகரிக்கும்.
மத்திய அரசு பருவநிலை சார்ந்த பயிர்களுக்கு காப்பீடு வழங்கும் திட்டத்தை ரூ.50 கோடியில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இத் திட்டம் குறிப்பிட்ட 5 மாநிலங்களில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது. ஆறு, குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க வேண்டும். அப்போதுதான் பயிர்களின் உற்பத்தி திறன் அதிகரிக்கும்.
சர்வதேச சந்தையில் மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால் உரங்களின் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டில் 3 மடங்கு உயர்ந்துள்ளது. உரங்களின் விலையை குறைக்க தனியார் நிறுவனங்களின் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார்.
இதில் ஈரோடு மாவட்டம் சித்தோடு வாசவி கல்லூரி பேராசிரியர் வி.எஸ்.கணேசமூர்த்திக்கு, மூத்த பொருளாதார நிபுணர் விருதும், மதுரை மாவட்டம் பாத்திமா கல்லூரி பேராசிரியை ஷோபனாவுக்கு, இளைய பொருளாதார நிபுணர் விருதும் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு பொருளாதார நிபுணர்கள் சங்கத் தலைவர் பாதிரியார் ஏ.ஜி.லியோனார்ட், துணைத் தலைவர் சி.முத்துராஜா, செயலர் எஸ்.எம்.சூர்யகுமார், பொருளாளர் ஜி.குணசேகரன், இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலை. பேராசிரியர் ஜூடித் ஹேயர் உள்பட பலர் பங்கேற்றனர்.