திருச்சி: காவிரி பாசன பகுதியில் சம்பா பருவத்திற்கு தண்ணீர் தேவையை நிறைவு செய்ய மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது அதிகரிக்கப்படுகிறது.
மேட்டூர் அணை நீர் மட்டம் இன்று காலை 88.25 அடியாக உயர்ந்தது.. இதன் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி.
அணைக்கு விநாடிக்கு 19,315 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து தற்போது காவிரி பாசன பகுதிகளின் விவசாய பணிகளுக்காக விநாடிக்கு 1,370 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இது இன்று மதியம் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படும்.
காவிரி பாசன பகுதி விவசாயிகள், அதிகளவு தண்ணீர் விவசாய பணிகளுக்காக திறந்து விட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்காக இன்று மதியம் முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது அதிகரிக்கப்படுகிறது.
அடுத்த இரண்டு தினங்களில், கல்லணையில் இருந்து பாசனத்திற்கு அதிகளவு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும்.
இன்று காலை நிலவரப்படி கல்லணையில் இருந்து காவிரி, வென்னார் ஆறுகளில் விநாடிக்கு தலா 51 கனஅடியும், கல்லணை கால்வாயில் விநாடிக்கு 1,246 கனஅடி, கொள்ளிடம் கால்வாயில் 69 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக காவிரி பாசன பகுதிகளில் மழை பெய்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து சம்பா பயிர்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது நடவு செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்களுக்கு தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு புதன் கிழமை முதல் மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது என்று கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளர் எம்.மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.