மழை-வெள்ளத்தால் பயிர்கள் பாதிப்பு!

சனி, 20 செப்டம்பர் 2008 (18:30 IST)
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெய்த கமழையாலும், வெள்ளத்தாலும் சுமார் 18 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த பல்வேறு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், துயர் துடைப்பு பிரிவு திரட்டியுள்ள தகவலின் படி, ஆந்திராவில் 4.32 லட்சம் ஹெக்டேர், உத்தர‌ப் பிரதேசத்தில் 4.15 லட்சம் ஹெக்டேர், ‌‌ீகாரில் 3.33. லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள, கரிப் பருவத்து பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ப‌ஞ்சா‌பி‌ல் சுமார் 2 லட்சத்து 7 ஆயிரம் ஹெக்டேர், அஸ்ஸாமில் 1,35,345 ஹெக்டேர், மேற்கு வங்கத்தில் 1,19,858 லட்சம் ஹெக்டேர், ஒரிசாவில் 1 லட்சத்து 19 ஆயிரம் ஹெக்டேர், ஹரியனாவில் 21,725 ஹெக்டேர், ஹிமால பிரதேசத்தில் 18,390 ஹெக்டேர், கேரளாவில் 5,383 ஹெக்டேர், கர்நாடகாவில் 2,241 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்த பயிர்கள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் மொத்தம் எவ்வளவு தானிய உற்பத்தி பாதிக்கப்படும் என்று உறுதியாக கூற முடியாது. ஏனெ‌னில் பல மாநிலங்களில் பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளனவா அல்லது ஒரு உற்பத்தி அளவு மட்டும் குறையுமா என்பது பற்றி சரியாக கணக்கிடப்படவில்லை. இருப்பினும் பல மாநிலங்களில் சாகுபடி செய்திருந்த நெல் பயிர்களில் குறைந்தபட்சம் 10 லட்சம் ஹெக்டேர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

குறிப்பாக அதிக அளவு நெல் மகசூல் கிடைக்கும் ஆந்திரா, பஞ்சாப், மேற்கு வங்க மாநிலங்களில் சராசரியாக ஒரு ஹெக்டேரிக்கு 2.5 முதல் 4 டன் வரை நெல் உற்பத்தியாகும். இந்த மாநிலங்களில் மட்டும் 30 லட்சம் டன் உற்பத்தி குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வேளான் துறை சார்பில் வருகின்ற 24, 25 ஆம் தேதிகளில் ரபி பருவத்திற்கான விவசாய கருத்தரங்கு நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கு முடிவில் மத்திய வேளான் அமைச்சகம் கரீப் பருவத்தில் நெல், எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு, சிறு தானியங்கள் உற்பத்தி மதிப்பீடு பற்றி அறிக்கை வெளியிட உள்ளது. இந்த அறிக்கையில் பல்வேறு பயிர்களின் உற்பத்தி பற்றி தெரியவரும்.

அதே நேரத்தில் வேளா‌ண் அமைச்சகத்தின் விவசாய உற்பத்தி குறித்த தட்ப வெட்ப பிரிவு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கரீப் பருவத்தில் மக்காச்சோளம், சோளம், பயத்தம் பருப்பு, உளுந்து, துவரை, நிலக்கடலை, சூரியகாந்தி, எள், நைஜிர், பருத்தி, கரும்பு, சணல் ஆகியவற்றை விவசாயிகள் குறைந்த அளவு பரப்பளவிலேயே சாகுபடி செய்திரு‌ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல், சோயா, ஆமணக்கு ஆகியவற்றை அதிக பரப்பளவில் சாகுபடி செய்திருந்தனர். இதில் நெற் பயிர் மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்