வீரிய கடுகு எண்ணை விதை கண்டுபிடிப்பு!

சனி, 30 ஆகஸ்ட் 2008 (09:28 IST)
இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம் அதிக எண்ணெய் திறன் உள்ள வீரிய கடுகு எண்ணெய் விதையை உருவாக்கியுள்ளது.

ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியானா, டெல்லி, ஹிமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் பரவலாக கடுகு எண்ணெய் சாகுபடி செய்யப்படுகிறது.

தற்போது அதிக அளவு மாயா, வருணா ரக விதைகளை பயன்படுத்தி எண்ணெய் கடுகு பயிரிடப்படுகிறது.

இந்திய விவசாய ஆராய்ச்சி கழகத்திற்கு ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த தேசிய ஆராய்ச்சி மையத்தில் அதிக எண்ணெய் கொடுக்கும் வீரிய கடுகு எண்ணெய் விலை உருவாக்கப்பட்டுள்ளது. சங்கர் சார்சன் என்று பெயரிடப்பட்டுள்ள மரபணு மாற்றம் மற்றும் மற்ற விதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மரபணுவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வீரிய விதை ஐந்து மாநிலங்களில் 11 இடங்களில் சோதனை முயற்சியாக சாகுபடி செய்யப்பட்டு, அதன் நோய் தாக்குதல், உற்பத்தி, எண்ணெய் சத்து போன்றவை ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

இதைப் பற்றி இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட மூத்த விஞ்ஞானி டாக்டர் கே.என்.சிங் கூறுகையில், ஏற்கனவே உள்ள மாயா, வருணா ரக விதைகளை விட, புதிய விதை பயன்படுத்தி சாகுபடி செய்யப்படும் கடுகில் இருந்து 20 விழுக்காடு கூடுதலாக உற்பத்தியாகும். இதன் சாகுபடி காலம் 133 நாட்கள். 190 செ.மீ வரை வளரும். 40.8 விழுக்காடு அதிக எண்ணெய் கிடைக்கும்.
இந்த புதிய எண்ணெய் விதை ராஜஸ்தான், உத்தர பிரதேச மாநிலங்களில் சாகுபடி செய்ய ஏற்றது என்று கூறினார்.

தாரா தாவர எண்ணெய் மற்றும் உணவு நிறுவனம் மற்றொரு வீரிய கடுகு எண்ணெய் விதையை உருவாக்கியுள்ளது. டி.எம்.ஹெச். 1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விதை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானில் சில பகுதிகளில் சாகுபடி செய்வதற்கு ஏற்றது என அறிவித்துள்ளது.

இந்தியாவில் 6.69 மில்லியன் ஹெக்டேரில் எண்ணெய் கடுகு பயிரிடப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்