கர்நாடகா மாநிலத்தில் இருந்து அதிக அளவு தண்ணீர திறந்து விடுவதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீர் கடந்த சில நாட்களாக குறைந்தது. இதனால் அணையின் நீர் மட்டம் 58 அடியை எட்டியது.
இந்நிலையில் நேற்று முதல் அணைக்கு அதிக அளவு நீர் வந்து கொண்டுள்ளது.
கர்நாடகா மாநில அணைகள் நிரம்பி வழிவதால், அங்கிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகின்றன. இன்று காலை மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இது மாலைக்குள் 30,000 கனஅடியாக உயரும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று காலை அணையின் நீர் மட்டம் 60.35 அடியாக இருந்தது. அணையின் மொத்த உயரம் 120 அடி.
காவிரி பாசன பகுதி விவசாய பணிக்காக அணையில் இருந்து விநாடிக்கு 13,008 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 5,214 கன அடி, வென்னாற்றில் 1,818 கன அடி, கல்லணை கால்வாயில் 2,306 கன அடி, கொள்ளிடம் ஆற்றில் 907 கன அடி தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது.