முழு கொ‌ள்ளவை "எட்டுமா' பவானிசாகர் அணை!

புதன், 6 ஆகஸ்ட் 2008 (12:04 IST)
பவானிசாகர் அணை முழுகொள்ளளவை எட்ட இன்னும் எட்டு அடியே உள்ள நிலையில் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தை முழுமையாக பசுமையாக வைத்திருக்க முக்கிய பங்கு வகிப்பது பவானிசாகர் அணையாகும். இந்த அணையின் மொத்த உயரம் 120 அடியாகும். இதில் சகதிகள் 15 அடி என கணக்கிடப்பட்டு அதை கழித்து மொத்தம் நீர்பிடிப்பு உயரம் 105 அடியாகும். தென்னிந்தியாவில் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும் இதற்கு உண்டு.

கடந்த வருடம் ஜூன் மாதத்தில் இருந்து தொடர்ந்து முழுகொள்ளவை எட்டியதால் அணை நிரம்பி உபரி தண்ணீர் காவிரிக்கு திறந்துவிடப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைவாகவே இருந்தது. அதேசமயத்தில் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் தண்ணீர் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டது.

இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் குறைந்து கடந்த வாரம் 93 அடிக்கு வந்தது. இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் திடீர் என பலத்த மழை பெய்ததால் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி வந்தது.
webdunia photoWD

இதனால் அணையின் நீர்மட்டம் திடீரென உயர்ந்து நேற்று புதன்கிழமை மாலை நான்கு மணி அளவில் 97.09 அடியாக இருந்தது. அணையின் முழுகொள்ளவை எட்ட இன்னும் எட்டு அடி மட்டும் உள்ளது. அதே சமயத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மேற்கு தொடர்ச்சி மழை தொடங்குவதால் அணையின் பாதுகாப்பு கருதி 100 அடி மட்டும் தேக்கி வைப்பார்கள்.

இந்த வகையில் இன்னும் மூன்று அடி உயர்ந்தால் பவானிசாகர் அணை உபரி தண்ணீர் திறந்து விடவாய்ப்புள்ளது. அதே சமயம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும். வழக்கம்போல் இந்த ஆண்டும் திறந்துவிடவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நேற்று அணைக்கு வினாடிக்கு 1324 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்துகொண்டிருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் விடுவது நிறுத்தப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் மட்டும் வினாடிக்கு 1350 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.