தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துவருவதால் கர்நாடகத்தின் குடகு மாவட்டத்திலும், கேரளத்தின் வயநாட்டிலும் பெய்துவரும் கன மழையால் காவிரி அணைகள் வேகமாக நிரம்புகின்றன.
மைசூருக்கு அருகேயுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நொடிக்கு 27,000 கன அடி வீதம் நீர்வரத்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 115 அடியைத் தாண்டியுள்ளது. இந்த அணையின் அதிகபட்ச கொள்ளளவு 124.8 அடியாகும். அணையிலிருந்து நொடிக்கு 6,500 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.
கேரளத்தின் வயநாட்டுப் பகுதியில் பெய்துவரும் மழையால் கபினி அணைக்கு நொடிக்கு 22,625 கன அடி வீதம் தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. நேற்றுவரை 30,000 கன அடி வீதம் நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து நொடிக்கு 17,000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.
காவிரியின் மீதுள்ள மற்றொரு அணையான ஹாரங்கியும் நிரம்பிவிட்டது. 2,858 அடி உயரம் கொண்ட அந்த அணைக்கு நொடிக்கு 6,600 கன அடி வீதம் நீர்வரத்து உள்ளது. நொடிக்கு 5,800 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.
ஹாரங்கியிலிருந்து திறந்துவிடப்படும் நீரும் கிருஷ்ணராஜ சாகரையே வந்தடையும். எனவே, அணை இன்னும் ஒரிரு நாட்களில் நிரம்பிவிடும் வாய்ப்புள்ளது.
எனவே அடுத்த சில நாட்களில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும். இன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நொடிக்கு 23,000 கன அடி வீதம் தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 12,000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.