நெல் கொள்முதல் விலை உயரும் - சரத் பவார்!

திங்கள், 28 ஜூலை 2008 (18:54 IST)
நெல் கொள்முதல் விலையை குவின்டாலுக்கு ரூ.1,000 ஆக உயர்த்துமாறு ஆந்திரா உட்பட நெல் உற்பத்தி செய்யும் மாநிலங்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் தெரிவித்தார்.

கோதுமைக்கு வழங்குவது போல் நெல் கொள்முதல் விலையையும் குவின்டாலுக்கு ரூ.1,000 ஆக உயர்த்துமாறு நெல் உற்பத்தி செய்யும் மாநில அரசுகள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

மத்திய அரசு சமீபத்தில் நெல் கொள்முதல் விலையை ரூ.850 ஆக நிர்ணயித்தது. இந்த விலை போதாது என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஹைதரபாத்தில் இன்று நியாய விலை கடைகளில் குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு மானிய விலையில் சமையல் எண்ணை வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய விவசாய துறை அமைச்சர் சரத் பவார் பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், நெல் உற்பத்தி செய்யும் மாநிலங்கள் இதன் கொள்முதல் விலையை (குறைந்தபட்ச ஆதார விலை) குவின்டாலுக்கு ரூ. ஆயிரமாக அதிகரிக்குமாறு கோரி வருகின்றன. இதை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இப்போது இந்த பிரச்சனை பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு முன் உள்ளது. இந்த குழு அதன் பரிந்துரையை இறுதியாக கொடுத்த பிறகு, பல்வேறு அம்சங்களையும் பரிசீலித்து பிரதமர் மன்மோகன் சிங் இறுதி முடிவு எடுப்பார் என்று கூறினார்.


ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவிக்கு வந்த பிறகு சன்னரக நெல் கொள்முதல் விலையை 59 விழுக்காடும், இதர ரக நெல் கொள்முதல் விலையை 52 விழுக்காடும் உயர்த்தியுள்ளது. இதற்கு முன் ஆட்சியல் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் சொற்ப அளவே கொள்முதல் விலை அதிகரித்தது என்று சரத் பவார் தெரிவித்தார்.

அவர் சமையல் எண்ணெய் வழங்கும் நிகழ்ச்சியில் பேசும் போது, இந்த வருடம் 230.76 மில்லியன் டன் உணவு தானியம் உற்பத்தி ஆகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விவசாய துறை வளர்ச்சி 4 விழுக்காக உயர தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் விவசாய துறை வளர்ச்சி ஒன்று முதல் 1.5 விழுக்காடு என்ற அளவிலேயே இருந்தது.

சென்ற வருடம் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பில் ராஷ்திரிய கிரிஷ் விக்யான் ரோஜனா என்ற விவசாய மேம்பாட்டு திட்டம் அறிமுகபடுத்தப் பட்டுள்ளது. இதே மாதிரி ரூ.5 ஆயிரம் கோடி செலவில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என்று சரத் பவார் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்