வெளிச் சந்தையில் கோதுமை விற்பனை!

செவ்வாய், 24 ஜூன் 2008 (13:47 IST)
கோதுமை விலை உயர்வை தடுக்க மத்திய அரசு வெளிச் சந்தையில் கோதுமையை விற்பனை செய்ய ஆலோசித்து வருகிறது.

மத்திய அரசு வசம் 222 லட்சம் டன்னுக்கும் அதிகமாக கோதுமை கையிருப்பில் உள்ளது. இந்த வருடத்தில் கோதுமை உற்பத்தி 780 லட்சம் டன்னாக இருக்கும். அடுத்த ஆறு மாதத்திற்கு மத்திய அரசு வெளிச் சந்தையில் கோதுமையை விற்பனை செய்யும். இதன் மூலம் அதிக அளவு கோதுமை சந்தையில் கிடைக்க செய்யும் என்று மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், மத்திய அரசு விலை அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வெளிச் சந்தையில் உணவு தானியங்கள் அதிக அளவு கிடைக்க செய்யும்.

பொது விநியோக திட்டத்திற்கு தேவையான அளவு போக, உபரியாக உள்ளவை மாநில அரசுகள் மூலம் வெளிச் சந்தையில் விற்பனை செய்யும். (பொது விநியோக திட்டத்திற்கு 120 லட்சம் டன் கோதுமை தேவை).

2007-08 ஆண்டில் கோதுமை உற்பத்தி 780 லட்சம் டன்னாக இருக்கும். இது கடைசி மதிப்பீட்டை விட 10 லட்சம் டன் கூடுதல்.

கோதுமை அறுவடை ஆகும் தகவலை வைத்து பார்க்கும் போது, சுதந்திரத்திற்கு பிறகு எப்போதும் இல்லாத அளவு கோதுமை உற்பத்தி சுமார் 780 லட்சம் டன்னாக இருக்கும் என்று தெரிகிறது சரத் பவார் கூறினார்.

மூன்றாம் கட்ட மதிப்பீட்டின் படி கோதுமை உற்பத்தி 767 லட்சத்து 80 ஆயிரம் டன்னாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

நெல்லுக்கு இறுதியான ஆதார விலை எப்போது அறிவிக்கப்படும் என்று கேட்டதற்கு சரத்பவார் பதிலளிக்கையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விலை (குவி‌ண்டாலுக்கு ரூ.850), சென்ற வருடத்தைவிட ரூ.105 அதிகம் என்று கூறிய சரத் பவார், பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் அறிக்கையை அரசு எதிர்பார்த்துக் கொண்டுள்ளது என்றார். ஆனால் அவர் இந்த அறிக்கை எந்த தேதிக்குள் கிடைக்கும் என்று காலக்கெடுவை கூற மறுத்துவிட்டார்.

தற்போது நெல் பயிரிடப்படும் பரப்பளவு திருப்திகரமாக இருப்பதாக சரத் பவார் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்