மலேசிய நிறுவனத்திற்கு பொன்னி அரிசி காப்புரிமை- விவசாயிகள் எதிர்ப்பு!

புதன், 11 ஜூன் 2008 (13:13 IST)
இந்தியாவில், குறிப்பாக தென் இந்தியாவில் அதிக அளவு பயிரிடப்படும் பொன்னி ரக அரிசியின் வர்த்தகக் காப்புரிமை, சமீபத்தில் மலேசியாவைச் சேர்ந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி இனி இந்தியா உட்பட எந்த நாடும் அரிசியை பொன்னி என்ற பெயரில் விற்பனை செய்யமுடியாது. பொன்னி என்ற பெயரில் விதை, நெல், அரிசி விற்பனை செய்தால், மலேசிய நிறுவனத்தின் அனுமதி பெற வேண்டும். அத்துடன் அதற்கான உரியத்தையும் (ராயல்டி) அந்நிறுவனத்திற்கு வழங்க வேண்டும்.

1986ஆம் ஆண்டுகளில் கோவையில் உள்ள தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகத்தால் பொன்னி ரக அரிசி உருவாக்கப்பட்டது.

இது உயர் விளைச்சல் விதைகளான டாய்சங்65 மற்றும் மியாங் எபாஸ் 6080/2 ரகங்களின் கலப்பின விதையாக பொன்னி ரகத்தை விவசாய பல்கலைக்கழகம் உருவாக்கி, விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்தியது.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு, தென் இந்தியாவில் பரந்த அளவு பயிர் செய்யப்படும் பொன்னி ரக அரிசிக்கு, மலேசிய நிறுவனம் காப்பீடு பெற்றுள்ளதற்கு விவசாயிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த விசயத்தில் மாநில அரசும், மத்திய அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் சாதிப்பது விவசாயிகள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னி ரக அரிசியை உருவாக்கிய தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகம், மலேசிய நிறுவனத்திற்கு வழங்கிய காப்புரிமை ரத்து செய்யவைப்பதற்கு சட்ட நிபுணர்களுடனும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

இது குறித்து தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழக துணை வேந்தர் சி.ராமசாமி கூறுகையில், பல்கலைக் கழகம் இது தொடர்பான தகவல்களை திரட்டி வருகின்றது. மலேசியாவில் உள்ள இந்திய தூதகரத்திடமும் விபரங்களை திரட்டி தரும் படி கேட்டுள்ளோம். இதில் எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி மத்திய வர்த்தக அமைச்சகத்தின் செயலாளரிடமும் ஆலோசனை நடத்தியுள்ளோம்.

காப்புரிமை வழக்குகளை நடத்தும் வழக்கறிஞரையும் நியமிக்க உள்ளோம். ஒரு சில நாட்களில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக 1997ஆம் ஆண்டு அமெரிக்கா பாசுமதி ரக அரிசி காப்புரிமையை ரைஸ்டெக் என்ற நிறுவனத்திற்கு வழங்கியது நினைவிருக்கலாம்.

இந்தியாவின் மரபுவழி சொத்துக்களும், புதிய கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளையும் பல அயல்நாட்டு நிறுவனங்கள் பெறுகின்றன.

மத்திய அரசு மே 15ஆம் தேதி நாட்டின் விவசாய மற்றும் தோட்ட விளை பொருட்களின் காப்புரிமையை பாதுகாக்கும் பொறுப்பை விவசாய விளைபொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்திற்கு வழங்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்