விவசாயத் துறை வளர்ச்சி அதிகரிப்பு!

வியாழன், 29 மே 2008 (18:59 IST)
விவசாயத் துறையின் வளர்ச்சி முந்தைய மதிப்பீட்டை விட அதிகரித்துள்ளது.

சென்ற நிதி ஆண்டில் (2007-08) விவசாயத் துறையின் வளர்ச்சி 2.6 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. இதன் வளர்ச்சி மதிப்பிட்டை விட உயர்ந்து 3.5 விழுககாடாக இருப்பது தெரிய வந்துள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டில், விவசாயத் துறையின் பங்கு 17 விழுக்காடாக கணக்கிடப்படுகிறது.

புது டெல்லியில் இன்று, ஐந்தாவது பொருளாதார புள்ளி விபரங்களை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் போது மத்திய புள்ளி விபரம் மற்றும் திட்ட அமலாக்கத் துறை செயலாளர் பிரனாப் சென் செய்தியாளர்களிடம் கூறுகையில், இறுதி கணக்கீட்டின் படி, விவசாயத் துறையின் வளர்ச்சி 3.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது. மறு மதிப்பீட்டன் படி விவசாய துறையின் வளர்ச்சி 0.7 முதல் 0.8 விழுக்காடு உயர்ந்துள்ளது என்று தெரிவிததார்.

இந்த வருடம் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி வெளியிடப்பட்ட மதிப்பீட்டின் படி விவசாயத் துறை வளர்ச்சி 2.6 விழுக்காடாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.7 விழுக்காடாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டது.

இப்போது விவசாயத் துறை வளர்ச்சி அதிகரித்துள்ளதால், மொத்த உள்நாட்டு உற்பத்தி 9 விழுக்காடாக உயரும்.

சென்ற நிதி ஆண்டில் அரிசி, கோதுமை, நவதாணியம், பருப்பு வகைகள், எண்ணெய் வித்து, பருத்தி ஆகியவற்றின் உற்பத்தி மதிப்பிடப்பட்ட அளவை விட, அதிகாமக உற்பத்தியாகி உள்ளது.

மத்திய விவசாய அமைச்சகம் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியிட்ட முன் மதிப்பீட்டின் படி, 2008-08 ம் ஆண்டில் 227.32 மில்லியன் டன் (1 மில்லியன்-10 லட்சம்) உணவு தானியம் உற்பத்தியாகும் என கூறியது. இது முந்தைய வருடத்தைவிட 10.04 மில்லியன் டன் அதிகம்.

இந்த பிப்ரவரியில் கோதுமை உற்பத்தி 74.81 மில்லியன் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. இதற்கும் அதிகமாக கோதுமை 76.78 மில்லியன் டன் உற்பத்தியாகியுள்ளது.

சென்ற நிதி ஆண்டில் 95.68 மில்லியன் டன் நெல் உற்பத்தியாகியுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு 93.35 மில்லியன் டன் உற்பத்தியானது.

இதே போல் பருப்பு வகைகளின் உற்பத்தி 15.19 மில்லியன் டன், எண்ணெய் வித்து உற்பத்தி 28.21 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.

மத்திய அரசு சென்ற வருடம் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் படி 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், இப்போது இருப்பதை விட நெல் உற்பத்தி 10 லட்சம் டன், கோதுமை உற்பத்தி 8 மில்லியன் டன், பருப்பு வகைகள் 2 மில்லியன் டன் அதிகரிக்க திட்டமிட்டது. இதற்காக ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. இதன் பலனாகவே உணவு தானியங்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்