நெற் பயிர் : ஏக்கருக்கு ரூ.4,000 நஷ்டஈடு!

வியாழன், 27 மார்ச் 2008 (15:35 IST)
சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.4,000 நஷ்டஈடு வழங்குவதென கேரளா முடிவு செய்துள்ளது.

கேரளாவில் சென்ற வாரம் பெய்த மழையால் வயல்களில் தண்ணீர் பெருகியது. இதனால் நெல் பயிர் உட்பட பல்வேறு பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவது என கேரள அரசு முடிவு செய்துள்ளது.

திருவனந்தபுரத்தில் நேற்று கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் மழையால் பாதித்த நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.4,000 நஷ்ட ஈடாக (ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம்) வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி முதல்வர் அச்சுதானந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, மழையால் நஷ்டமடைந்துள்ள விவசாயிகளுக்கு நஷ்டஈடு வியாழக்கிழமை முதல் வழங்கப்படும். இது அவர்கள் மீண்டும் விவசாய பணி செய்ய உதவியாக இருக்கும்.

சென்ற வாரம் பெய்த மழையால் 28,321 ஹெக்டேரில் (1 ஹெக்டேர்-2.47 ஏக்கர்) நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் 40,826 விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர். இதில் 17,000 ஹெக்டேரில் உள்ள நெற்பயிர்கள் முழுவதுமாக அழிந்து விட்டன.

இந்த மழையால் 1 லட்சத்து 40 ஆயிரம் டன் நெல் நஷ்டமடைந்துள்ளதாக அதிகாரிகள் மட்டத்திலான உய்ர் மட்ட குழு மதிப்பீடு செய்துள்ளது.

விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க மொத்தம் ரூ.25 கோடி தேவை. அரசு ஏற்கனவே ரூ.12 கோடி ஒதுக்கியுள்ளது.

இந்த மழையால் முந்திரி, மாந்தோப்பு, மிளகு, வாழை போன்ற பணப்பயிர் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பற்றி மாவட்ட ஆட்சியாளர்களிடம் இருந்து அறிக்கை கிடைத்த பிறகு, எவ்வளவு நஷ்டஈடு வழங்குவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். கேரளாவில் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய நிபுணர்கள் குழு வருவதாக அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது என்று கூறினார்.

கேரள விவாசாய அமைச்சர் முல்லாகாரா ரத்னாகரன் கூறுகையில், விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக, மத்திய அரசு தாராளமாக நிதி உதவி அளிக்க வேண்டும். முழுவதுமாக நெற்பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் நஷ்டஈடு வழங்கப்படும். மத்திய அரசின் விதிப்படி 50 விழுக்காடு நெல் பயிர் பாதிக்கப்பட்டு, ஈரப்பதம் 17 விழுக்காட்டிற்கு அதிகமாகவும், அல்லது நெல்லில் 1 விழுக்காட்டிற்கு மேல் பதர் போன்றவைகள் இருந்தாலும், அவையும் முழு பாதிப்பாக கருதப்படும்.

இந்த மாதிரியான நெல் என்ன விலையில் கொள்முதல் செய்வது என்பதை, விவசாய விளைபொருட்கள் ஆணையரின் தலைமையிலான குழு முடிவு செய்யும். இதன் பாதிப்பை அறுவடை செய்த பிறகுதான் கணிக்க முடியும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்