நெல் கொள்முதல் விலை: முடிவு எடுக்கவில்லை-சிதம்பரம்!

திங்கள், 17 மார்ச் 2008 (16:21 IST)
நெல் ஆதார விலையை குவின்டாலுக்கு ரூ.1,000 ஆக அதிகரிப்பது பற்றி அரசு முடிவு எடுக்கவில்லை என்று சிதம்பரம் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் இன்று பட்ஜெட் விவாதத்திற்கு பதிலளித்து பேசும் போது மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம கூறியதாவது:

விவசாய உற்பத்தி செலவு மற்றும் விலை நிர்ணய குழு, நெல்லுக்கு ஆதார விலையாக குவின்டாலுக்கு ரூ.1,000 வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க கோதுமைக்கு சமமாக, நெல் ஆதார விலையை குவின்டாலுக்கு ரூ.550இல் இருந்து ரூ.740 ஆக அதிகரித்தது.

விவசாய உற்பத்தி செலவு மற்றும் விலை நிர்ணய குழு நெல்லின் ஆதார விலையை குவின்டாலுக்கு ரூ.ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் அரசு இது பற்றி முடிவு எடுக்கவில்லை என்று கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், 1998-99 ஆம் ஆண்டில் ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.440 வழங்கப்பட்டது. இது முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியில் இருந்து இறங்கிய 2003-04 இல் ரூ.550 ஆக இருந்தது.

இதே போல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பேற்கும் போது கோதுமையின் ஆதார விலை குவின்டாலுக்கு ரூ.630 ஆக இருந்தது. இது தற்போது ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நாம் விவசாயிகளுக்கு அதிக விலை கொடுக்கின்றோம். இதனால் நுகர்வோர் அதிக விலை கொடுக்க வேண்டியதுள்ளது என்று கூறினார்.

முன்னதாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எம். வெங்கையா நாயுடு பேசுகையில், 11 மாநிலங்களில் உள்ள நெல் பயிரிடும் விவசாயிகள் விரைவில், கோதுமைக்கு நிகராக நெல் ஆதார விலையை உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதாக கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்