இந்திய வேளாண் பொருட்களில் 'காப்ரா' பூச்சிகள் கண்டறியப்பட்டதாகக் கூறி, அவற்றின் இறக்குமதிக்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்துள்ளது.
ரஷ்ய பிரதமர் விக்டர் சுப்கோவ் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள தயாராக இருந்த நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதியில் இருந்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் பயிரிடப்படும் புகையிலை, வெங்காயம், காளான், காய்கறிகளில் விஷத்தன்மை கொண்ட 'காப்ரா' பூச்சி இருந்ததால் இந்தியாவின் ஒப்புதலுடன் வேளாண் பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் வேளாண் பொருட்கள் ஆய்வுக் குழுவான ரோசெல்கோஸ்நாட்சர் தெரிவித்துள்ளது.
எனினும், "ரஷ்ய வேளாண் துறை அமைச்சர் அலேக்சி கோர்தேயேவ்வை இந்திய தூதரக அதிகாரி பிரபாத் சுக்லா சந்தித்தபிறகு இந்த முடிவை ரஷ்யா மறுபரிசீலினை செய்ய உள்ளது" என்று ரோசெல்கோஸ்நாட்சர் தலைவர் செர்கெய் தன்க்வேர்ட் கூறினார்.
இதுபோன்ற சம்பவங்களை சமாளிக்கவும், சரியான முடிவு எடுக்கவும் இருநாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள இந்தியா ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தாவர வகை வேளாண் பொருட்கள் குறித்த விளக்கமான அறிக்கையை ரஷ்யா கேட்டுள்ளது. அதன்படி, இந்த ஒப்பந்தத்தின் அம்சங்களை தயாரிக்க 6 மாதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், தேயிலை பொருட்கள் மீதான தடை குறித்த தகவலை ரஷ்ய உயர் அதிகாரிகள் மறுத்துள்ளனர். "இந்தியாவின் தேயிலை பொருட்களுக்கு ரஷ்யா தடை விதிக்கவில்லை. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உட்பட மூன்று துறைமுகங்களில் சிறப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இந்திய தேயிலை அனுமதிக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளனர்.