இந்தியாவில் இருந்து பருத்தி ஏற்றுமதி செய்வது சென்ற ஆண்டை விட இருமடங்கு அதிகரிக்கும் என தெரிகிறது.
webdunia photo
FILE
இந்தியாவில் இருந்து அந்நிய நாடுகளுக்கு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதத்தில் 55 லட்சம் பேல் பருத்தி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. (பருத்தி பருவம் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை. இந்த 12 மாத காலத்தை தான் பருத்தி ஆண்டு என குறிப்பிடப்படுகிறது. 1 பேல் என்பது 170 கிலோ அல்லது 375 பவுன்ட்). இது சென்ற வருடத்தைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் இந்தியா பருத்தியை அதிகளவு ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முன்பு அமெரிக்கா, உஸ்பெக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவு பருத்தி இறக்குமதி செய்தன. இவை இந்த வருடம் இந்தியாவில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய முடிவெடுத்துள்ளன.
இதில் சீனா அதிகளவு பருத்தி இறக்குமதி செய்ய வசதியாக பருத்திக்கான இறக்குமதி வரியை குறைத்துள்ளது.
அத்துடன் அமெரிக்காவில் இந்த வருடம் பருத்தி விளைச்சல் கடுமையாக குறைந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பருத்தி உற்பத்தி குறைந்துள்ளது. இதற்கு காரணம் அமெரிக்காவில் பருத்தி பயிரிடும் விவசாயிகள். இதை விட இலாபகரமாக உள்ள சோயா, கோதுமை ஆகியவைகளுக்கு மாறிவிட்டனர். சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் சோயா, கோதுமை பயிரிடும் அளவு 70 விழுக்காடுக்கும் அதிகமாக அதிகரித்து விட்டது. ஆனால் பருத்தி 21 விழுக்காடு பரப்பளவில் மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதனால் இந்த வருடம் அமெரிக்காவில் பருத்தி உற்பத்தி குறையும். முன்பு அமெரிக்காவில் இருந்து பருத்தியை இறக்குமதி செய்த நாடுகள், இந்த வருடம் இந்தியாவில் இருந்து அதிக அளவு இறக்குமதி செய்யும். அத்துடன் அதிகளவு பருத்தி உற்பத்தியாகும் மற்ற நாடுகளிலும், இந்த வருடம் பருத்தி உற்பத்தி பாத்க்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை இந்திய ஏற்றுமதியாளர்கள் நன்கு பயன் படுத்த துவங்கி உள்ளனர். இதனால் தான் சென்ற வருடத்தில் ஏற்றுமதி செய்த அளவை விட, கடந்த மூன்று மாதங்களில் ஏற்றுமதி செய்த அளவு அதிகரித்துள்ளது.
இதனால் உள்நாட்டில் பருத்தி விலை அதிகரித்துள்ளது. இதன் விலை கடந்த மாதங்களில் குறுகிய இழை பருத்தியின் விலை 5 விழுக்காடு முதல் 6 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. இதே போல் முதல் தர பருத்தியின் விலை 40 விழுக்காடு வரை அதிகரித்து விட்டது.
இது குறித்து காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் (இந்திய பருத்தி கழகம்) செயல் இயக்குநர் சுபாஷ் குரோவர் கூறுகையில் இந்த வருடம் இது வரை ஏற்றுமதி செய்யப்பட்டதில், பாதிக்கும் மேல் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
விவசாயிகள் மரபணு மாற்றப்பட்ட பருத்தியை பயிரிட துவங்கியதால், பருத்தி விளைச்சல் அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.
சர்வேதச அளவில் பருத்தி உற்பத்தியில் நான்காவது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. இந்த வருடம் பருவநிலை பாதிப்பு மற்றும் பூச்சி தாக்குதலால் பருத்தி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் அரசு இந்தியாவில் இருந்து 5 லட்சம் பேல் பருத்தி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது.
ஆயத்த ஆடைகள், தரை விரிப்பு. திரைச் சீலை போன்ற ஜவுளி துறையின் வர்த்தகத்தில் சர்வதேச அளவில் இந்தியாவிற்கு போட்டியாக உள்ள நாடுகள் சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், தாய்லாந்து ஆகியவை.குறிப்பாக சீனாவின் போட்டியை சமாளிக்க முடியாமல் ஏற்கனவே இந்திய ஏற்றுமதியாளர்கள் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் பருத்தி ஏற்றுமதியால் உள்நாட்டு விலை அதிகரிப்பது ஆயத்த ஆடை, பின்னலாடை, தரை விரிப்பு, படுக்கை விரிப்பு போன்ற பருத்தியினால் தயாரிக்கப்பட்ட பொருட்களை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களை கடுமையாக பாதிக்க வாய்ப்பு உள்ளது. ஜவுளித் துறையும், அதை சார்ந்த தொழில்களும், இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிகமான மக்களுக்கு, குறிப்பாக பெண்கள், குறைந்த அளவு படித்த, திறன் குறைந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.